அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் கடந்த காலங்களில் பல இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தியபோது, அதன் காரணமாக மக்களின் வாழ்க்கையையே பாழாக்குகிறார் என்றும், மக்களை தாங்களாக முன்னேற விடாமல் சோம்பேறியாக்குகிறார் என்றும் சில எதிர்க்கட்சியினரும் சில ஏடுகளும் கண்டனக் கணைகளை பொறிந்தார்கள். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இலவசமாக 20 கிலோ அரிசி வழங்குகின்ற திட்டத்தைத் தொடங்கும் போது அதை பாராட்டுகிறார்கள்.
ஒரு நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் இலவச திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றுவதற்காக அதிக அளவில் கடன் வாங்குவதாக எழுதியிருந்தது. ஓர் அரசாங்கத்திற்கு எப்படியாவது கடன் வாங்கியே தீர வேண்டும் என்பது நோக்கமல்ல. தி.மு.க. பொறுப்பிலே இருந்த போதுள்ள நிதி சூழ்நிலையில், அரசாங்கம் மக்களுக்காக நல்ல பல திட்டங்களை தீட்ட வேண்டுமேயானால், கடன் வாங்கித்தான் அந்தத் திட்டங்களைத் தீட்ட வேண்டிய நிலையிலே இருந்தது என்பது தான் உண்மை.
மேலும் தமிழக அரசைப் பொறுத்தவரையில் இலவச திட்டங்களுக்காக கடன் வாங்கவில்லை என்றும், கட்டுமானப் பணிகள் போன்ற மூலதனச் செலவுகளுக்காக மட்டுமே கடன் வாங்கியது.
ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தவுடன் தி.மு.க. அரசு ஒரு லட்சம் கோடி கடனை வைத்துள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் நிதித்துறை பொறுப்பிலே உள்ளவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்திருப்பார்கள் என்று கருதுகிறேன். தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தி வந்த ஒரு சில திட்டங்களைத் தான் தற்போது அ.தி.மு.க. அரசு சற்று விரிவாக்கம் செய்து நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளது.
குறிப்பாக தி.மு.க. அரசு 2006ம் ஆண்டு ஏற்பட்ட போது தான் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்து, தொடங்கி பிறகு சில மாதங்களுக்குப் பின் அந்தத் திட்டத்தையே மேலும் விரிவுபடுத்தி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தி வந்தது.
அந்தத் திட்டத்தையே தான் தற்போது ஜெயலலிதா அரசு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வழங்கப்பட்டதற்கு மாறாக தற்போது அதே 20கிலோ அரிசியை 20 ரூபாய் வாங்காமலே இலவசமாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கான திருமண உதவித் திட்டமும் தி.மு.க. அரசின் திட்டம் தான். அந்த திட்டத் தொகையைத் தான் அ.தி.மு.க. அதிகமாக்கி தற்போது அறிவித்திருக்கிறார்கள்.
இத் திட்டங்களை எல்லாம் இலவசத் திட்டங்கள் என்றும் இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு விளைவிப்பவை என்றும் கண்டித்துப் பேசியவர்கள் எல்லாம் தற்போது இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முன் வந்திருப்பதை பார்க்கும்போது, எப்படியோ தி.மு. கழக அரசு செய்யத் தொடங்கிய சாதனைகள் நல்ல வேளை நிறுத்தப்பட்டு விடாமல் தொடருகிறதே என்று அந்த இலவச உதவிகளைப் பெறுவோர் எண்ணிப் பார்ப்பார்கள் என்று நம்பலாம்.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்திற்கு ரூ.922 கோடியும், பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4251 கோடியும் என பல திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்ட இந்த நிதியுதவி ஏழை மக்களைச் சென்றடைந்துள்ளது. சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் ஏழைகள் உயர் சிகிச்சையை இலவசமாகப் பெற்றுள்ள காப்பீட்டுத் திட்டம், பல உயிர்களை காக்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க. அரசு முன்பிருந்த அதே வேகத்தோடு நடத்தப் போகிறார்களா? அல்லது அதையும் தலைமைச் செயலகத்தைப் போல தமிழ்ச் செம்மொழி மையத்தைப் போல, சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போல நிறுத்தப் போகிறார்களா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியும்.
அ.தி.மு.க. ஆட்சியில் 31-3-2006ம் நாளன்று தமிழக அரசின் மொத்த கடன் பொறுப்பு ரூபாய் 57,457 கோடி என்பது அப்போதைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதம் ஆகும். 2010-11ம் ஆண்டில் அரசின் மொத்த கடன் பொறுப்பு ரூபாய் 1,01,541 கோடியாக உயர்ந்திருந்த போதிலும், இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவீதம் மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.கழக அரசு உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.2,442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபிவிருத்தி திட்டம், ரூ.1,224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண்டது. எனவே பொறுப்போடு தான் கடனை பெற்று தி.மு.கழக அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது என்பதை அனை வரும் புரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாக கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். 2011ம் ஆண்டு மார்ச் 24ம் தேதிய நிலவரப்படி தமிழக அரசின் ரொக்கக் கையிருப்பு 13 ஆயிரத்து 537 கோடி ரூபாயாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒருநாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை தமிழக அரசு பெற்றதில்லை. ஆனால் பல மாநிலங்கள் கூடுதல் வரைவுத் தொகையைப் பெற்றுள்ளன என்று தெரிவித்திருப்பதையும் கவனித்தால் தி.மு.கழக ஆட்சியில் அளவுக்கு மீறி கடன் வாங்கவில்லை என்பதையும், கடன் வாங்கி கழக அரசு இலவசத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் கருணாநி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக