ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கானா – வரலாறு



Telangana2
ஆந்திர மாநிலத்தை நிலைகுலையச் செய்திருக்கும் தெலுங்கானா தனி மாநில போராட்டம் தேசிய இன போராட்டமா, இல்லை பிரிவினைவாதமா…? இதில் புதைந்துள்ள உண்மைகள் என்ன?
இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று
, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.
கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது.
கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.
காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-இல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர்.
பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-இல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது.
ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும் சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.
அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது.
அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.
ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-இல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர்.
ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.
தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன.
ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.
அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சி 2001-இல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகர ராவ்.
அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர்.
தனித் தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.
இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர்.
தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.
ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர்.
தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெரு நகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.
அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர்.
இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக