சென்னை தெருக்களில் குப்பை மற்றும் கட்டிட இடிபாடுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிப்பதற்கான தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்ற உள்ளது.
சென்னை நகர தெருக்களில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.100 அபராதம் விதிப்பது, கட்டிட இடிபாடுகளை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிப்பது என்று கடந்த 2008-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர்.
அபராத தொகை லட்சக்கணக்கில் வசூலான நிலையில்,இத்திட்டம் தொடர்ந்து தீவிரமாக அமல் ஆகாமல் போனது.வேலைப்பளுதான் இதற்கு காரணம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,தற்போது இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதோடு,அபராதத் தொகையை 4 முதல் 5 மடங்கு உயர்த்தி வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது.
அதன்படி தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.100 அபராதம் என்பது ரூ.500 ஆகவும், கட்டுமான கழிவுகளை கொட்டினால் இதுவரை ரூ.500 அபராதம் என்பது ரூ.2000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
இதற்கான தீர்மானம் வருகிற 19-ம் தேதியன்று, மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட்டு மன்ற ஒப்புதல் பெறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக