ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தம்மை இந்தியாவின் சிபிஐ அமைப்பினர் 2010-ம் ஆண்டே விசாரித்தாகவும் தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி
ஆகியவற்றுக்கும் தனக்குமான தொடர்பு என்ன என்று கேள்வி கேட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாபன் என்ற கேபி கூறியுள்ளார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் இதனை தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தில் எனக்கு எந்த ஒரு தொடர்புமே இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை பல்வேறு பிரிவுகள் இருந்தன. அடுத்த பிரிவில் வேறு எவரும் தலையிட முடியாது. தமிழகத்தில் இருந்து செயல்பட்டவர்கள் வேறு ஒருவரது தலைமையின் கீழ் செயல்பட்டனர்.
எனக்கு மட்டுமல்ல… லண்டனில் இருந்த கிட்டுவுக்கும் கூட ராஜிவ் கொலை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. உண்மையை சொன்னால் கிட்டுவிடம், ராஜிவ் காந்தியுடனும் இந்தியாவுடனும் நல்ல உறவை மேம்படுத்துமாறுதான் பிரபாகரன் கூறியிருந்தார். காசி ஆனந்தன், பொருளாதார வல்லுநர் அர்ஜூன சிற்றம்பலம் போன்றோர் மூலம் இந்தியாவுக்கு சென்று ராஜிவை சந்திக்க கிட்டு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ராஜிவை கொலை செய்யும் திட்டத்தை பிரபாகரனும் பொட்டம்மானும்தான் திட்டமிட்டிருக்க வேண்டும். பிரபாகரன் ரகசியமாக திட்டங்களை நிறைவேற்றக் கூடியவர். அதை வேறு எவரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார். நானோ அல்லது என்னுடைய ‘கேபி’ டிபார்ட்மெண்ட்டோ இதில் ஈடுபடவில்லை. என்னுடைய பணி என்பது இயக்கத்துக்கு ஆயுதங்களைக் கொடுப்பது என்பதுதான்.
ராஜிவ் கொலை நடந்தபோதுதான் இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்தேன். ராஜிவ் கொலை நடப்பதற்கு முன்பு நான் இந்தியாவில் மும்பையில்தான் இருந்தேன். ராஜிவ் கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் மும்பையிலிருந்து மலேசியாவுக்கு சென்றேன். என்னுடைய பயணம் முன்பே திட்டமிடப்பட்டது. ராஜிவ் கொலை சம்பவத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
ராஜிவ் கொலையில் எனக்கு தொடர்பில்லை என்பது இந்தியாவின் சிபிஐக்கு தெரியும். அதனால்தான் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் நான் தலைமறைவு குற்றவாளி இல்லை. என்னை இண்டர்போல் பட்டியலில் சேர்த்ததற்கு காரணம், என்னிடம் சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள சிபிஐ விரும்பியதுதான். அப்போது நான் இந்தியாவில் இல்லை. எங்கு இருக்கிறேன் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் இண்டர்போல் மூலம் நோட்டீஸ் விடுத்தனர்.
ராஜிவ் கொலை தொடர்பாக அண்மையில் ஊடகங்களில் வெளியானதுபோல் இப்போது என்னிடம் விசாரணை நடத்தப்படவில்லை. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலேயே விசாரிக்கப்பட்டுவிட்டேன். சிபிஐ மற்றும் றோ அமைப்பு அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர். ராஜிவ் கொலைக்காக நிதி உதவி செய்தீர்களா என்று கேள்வி கேட்டனர். இப்படியான செயல்களை பொதுவாக விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு ‘ரகசிய’ நிதி மூலமே செய்யும் என்று விளக்கம் அளித்தேன். மேலும் தணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கை துப்பாக்கி பற்றி என்னிடம் விசாரித்தனர்.
ராஜிவை கொல்ல தணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டை நான் தந்தேனா? என்று விசாரித்தனர். நான் இல்லை என்று சொன்னேன். மேலும் பெல்ட் வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். போன்றவை இந்தியாவிலேயே கிடைக்கக் கூடியதுதான். அதை வெளிநாட்டில் இருந்து வாங்கித்தர வேண்டியது இல்லை என்றேன். அந்த பெல்ட் வெடிகுண்டை தமிழீழ விடுதலைப் புலிகளே தயாரித்திருக்கின்றனர் என்றேன். அதை சிபிஐயும் ஏற்றுக் கொண்டது.
இந்தியாவால் ‘ஒற்றைக்கண் சிவராசன்’ என்றழைக்கப்படுகிற சிவராசன் 9 எம்.எம். பிஸ்டல் வைத்திருந்தார். அதை நான் தான் சிவராசனுக்கு கொடுத்தேனா என்பதுதான் சிபிஐயின் சந்தேகம். அதை நான் கொடுக்கவில்லை என்றேன். அதையும் சிபிஐ ஏற்றுக் கொண்டது.
இதேபோல் இந்தியாவின் றோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். என்னுடன் சிலர் ஆலோசனை நடத்தினர். விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் எதிர்காலம், புலம் பெயர் தமிழர்கள், புலம் பெயர் தமிழர் அமைப்புகள், ஆயுத போராட்டத்தின் எதிரொலி ஆகியவற்றை பற்றி விவாதித்தனர் என்று கேபி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக