இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தது, சைமண்ட்சை களத்தில் மங்கி என திட்டியது உள்ளிட்ட பிரச்னைகளில் ஏற்கனவே சிக்கி தண்டனைகளையும் பெற்றுள்ளார். சமீபகாலமாக அவர் எந்த சர்ச்சையிலும் மாட்டாமல் இருந்தார். இந்நிலையில் மதுபான விளம்பரம் தொடர்பாக கேப்டன் டோனிக்கும், அவருக்கும் இடையே ‘லடாய்’ ஏற்பட்டுள்ளது. ஹர்பஜன்சிங் ராயல் ஸ்டாக் மதுபான விளம்பரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு போட்டி நிறுவனமான விஜய்மல்லையாவின் மெக்டவல்ஸ் மதுபான விளம்பரத்தில் டோனி நடித்துள்ளார். சர்ச்சையே இங்குதான் கிளம்பியுள்ளது. டோனி நடித்துள்ள விளம்பரம் ஹர்பஜன்சிங் விளம்பரத்தை தாக்கி எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹர்பஜன்சிங்கையும், அவரது குடும்பத்தையும், சீக்கிய சமுதாயத்தையும் டோனியின் விளம்பரம் அவமதித்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹர்பஜன்சிங்கின் தாய் அவதார்கவுர் விளம்பரத்தை தயாரித்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுக்கெல்லாம் நோட்டீஸா?
டோனியின் விளம்பரத்தை தயாரித்துள்ள விஜய்மல்லையா கூறுகையில், சர்ச்சைக்குள்ளான விளம்பரம் ஹர்பஜனை தனிப்பட்ட முறையில் தாக்குவதாக அர்த்தம் கிடையாது. 2 தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிதான். ஹர்பஜன்சிங் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நோட்டீஸ் எங்களுக்கு கிடைத்துள்ளது. டி.வி.க்களில் அரசியல்வாதிகள் பற்றி விமர்சிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வருகின்றன. இதற்கெல்லாம் அவர்கள் நோட்டீஸ் அனுப்பி கொண்டா இருக்கிறார்கள் என்றார்.
சர்ச்சை வசனம்
ராயல் ஸ்டாக் மதுபான விளம்பரத்தில் தோன்றும் ஹர்பஜன்சிங் ‘இன்னும் நான் அதிகம் எடுத்து கொள்வேன்’ என ஸ்டைலாக வசனம் பேசுகிறார். இதற்கு போட்டியாக எடுக்கப்பட்டுள்ள டோனி நடித்த விளம்பரத்தில் ஹர்பஜன்சிங் போன்று தோற்றமுடையவர் அவரது தந்தையிடம் அடிவாங்குவது போலவும், அப்போது டோனி தோன்றி ‘அதிகம் எடுத்து கொள்வதை எல்லாம் மறந்து விடுங்கள், எதையாவது வித்தியாசமாக செய்யுங்கள்’ என்று கூறுகிறார்.
டோனிக்கு எதிரானவனா?
விளம்பர சர்ச்சை தொடர்பாக ஹர்பஜன்சிங் கூறுகையில், டோனியுடன் விளம்பர பிரச்னை தொடர்பாக பேசினேன். அப்போது அவர் நான் நடிக்க மட்டும்தான் செய்தேன். அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்த விளம்பரத்தை நான் முழுமையாக பார்க்கவில்லை என்று கூறினார். நான் டோனிக்கு எதிரானவன் அல்ல. விளம்பரத்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராகத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மிகவும் கீழ்த்தரமாக விளம்பரத்தை தயாரித்துள்ளனர். இது என்னையும், எனது குடும்பத்தையும் காயப்படுத்தியுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக