திருப்பூர்: கடன் வாங்கிய பணம் ரூ.4.5 லட்சம் திருடுபோனதால் விரக்தி அடைந்த பனியன் கம்பெனி அதிபர் குடும்பத்தோடு தூக்கு போட்டுக் கொண்டார். கழுத்து வலி தாங்காமல் குதித்த மகள் மற்றவர்களையும் காப்பாற்றினார்.திருப்பூர் மாஸ்கோ நகரை சேர்ந்தவர் இப்ரான்தீன் (45). பனியன் கம்பெனி உரிமையாளர். மனைவி ஆயிஷா (36). 17 வயது மகன் பனியன் கம்பெனியை கவனித்து வருகிறார். மகள் (15) பத்தாம் வகுப்பு படிக்கிறார். பனியன் தொழிலை விரிவுபடுத்த இப்ரான்தீன் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். தன்னிடம் இருந்த ரூ.1.5 லட்சத்தை சேர்த்து ரூ.4.5 லட்சத்தில் புதிய மெஷின்களை வாங்க திட்டமிட்டிருந்தார். அவரது வீட்டின் ஒரு பகுதியில் மணிகண்டன் என்பவர் குடியிருக்கிறார். நெல்லையை சேர்ந்தவர். தனக்கு தெரிந்தவரிடம் மெஷின் இருப்பதாகவும் குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் அவர் கூறினார். இதுபற்றி பேச கடந்த 1-ம் தேதி மாலை இப்ரான்தீனை காரில் அழைத்து சென்றார். திருப்பூர் - காங்கயம் ரோட்டில் நாச்சிபாளையம் என்ற இடத்தில் காரை நிறுத்திய மணிகண்டன், கத்தியை காட்டி மிரட்டி இப்ரான்தீனிடம் இருந்த ரூ.4.5 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பினார். அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ‘வீடு அடமானத்தில் இருக்கிறது. பணமும் திருடுபோய்விட்டது. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று விரக்தியுடன் கூறிய இப்ரான்தீன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். குடும்பத்தினரும் சம்மதித்தனர். ஊர் விழிப்பதற்குள் அதிகாலை நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர். இன்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தனர். சேலைகளை எடுத்து வீட்டு உத்தரத்தில் கட்டி இப்ரான்தீன், ஆயிஷா, மகன், மகள் தூக்கு போட்டுக் கொண்டனர். தூக்கில் தொங்கிய மகள், கழுத்து இறுகியதால் அலறினார். ‘‘அம்மா.. கழுத்து வலிக்குது’’ என்று கத்திக்கொண்டே கட்டை அவிழ்த்துவிட்டு கீழே குதித்தார். கண்முன்னே அப்பா, அம்மா, அண்ணன் தூக்கில் தொங்குவதை பார்த்ததும் பதறினார். சேலையை அறுத்தெறிந்து அவர்களையும் கீழே இறக்கினார். விஷயம் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இப்ரான்தீன், ஆயிஷா, மகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி. பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி. ராஜாராம் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். பணம் பறிபோனது தொடர்பாக புகார் கொடுக்க சென்ற இப்ரான்தீனை திருப்பூர் வடக்கு, ரூரல், அவிநாசிபாளையம் போலீசார் தங்கள் லிமிட் இல்லை என்று கூறி மாறி மாறி அலைக்கழித்துள்ளனர். ஒரு நாள் கழித்தே அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின்போது அவரை போலீசார் மோசமாக நடத்தியதாக உறவினர்கள் கூறினர். செல்போன் சிக்னலை வைத்து போலீசார் நெல்லை சென்று விசாரித்து வருவதாக எஸ்.பி. பாலகிருஷ்ணன் கூறினார். பள்ளியில் கற்றது காப்பாற்றியது. சேலை முடிச்சை அவிழ்த்துவிட்டு கீழே குதித்த மகள் தன் கண் எதிரே அப்பா, அம்மா, அண்ணன் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறினார். சேலையை அறுத்து அவர்களையும் கீழே இறக்கினார். அதற்குள் கழுத்து இறுகியதால் அவர்கள் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டனர். மூச்சு திணறல் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பாக பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சி மகளுக்கு நினைவு வந்தது. அவ்வாறே செய்து அவர்களை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. For more NEWS updates, follow us on Twitter or join us on Facebookமின்னஞ்சல் | 0 0 0 New மேலும் சில
|
தூக்கில் தொங்கிய குடும்பத்தை காப்பாற்றியது மகள் கழுத்து வலி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக