பாடாலூர்: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகள் திடீரென சாமியாடி, அம்மன் பேனரை அவமதித்தவரை மன்னிப்பு கேட்க வைத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது
. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை அடுத்த தெரணி கிராமத்தில் மகா காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 26ம் தேதி துவங்கியது. இதற்காக காளியம்மன் படம் போட்ட பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். அதை உள்ளூரைச் சேர்ந்த தனபால் என்பவர் அவமதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 4ம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென அருள் வந்து சாமி ஆடினார். இதை பார்த்த ஆசிரியர்கள் அவரை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். சிறிது நேரத்தில் மேலும் சுமார் 20 மாணவிகள் சாமி வந்து ஆடத்தொடங்கி பள்ளியை விட்டு வெளியேறி கோயிலுக்கு சென்றனர். இதை பார்த்த கிராம மக்களும் அதிர்ச்சியடைந்து அவர்களை பின்தொடர்ந்தனர்.
கோயில் முன் சிறிது நேரம் சாமியாடிய மாணவிகள், அம்மன் பேனரை அவமதித்த தனபால் வீட்டுக்கு சென்று சாமியாடினர். தனபாலை மன்னிப்பு கேட்கும் படியும் கூறினர். இதையடுத்து தனபால் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட கலெக்டர் தாரேஷ் அகமது அங்கு சென்று விசாரித்தார். மருத்துவ குழுவினரும் அங்கு வந்து மாணவிகளை பரிசோதித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆலத்தூர் வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் வசந்தா, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜார்ஜ் வாஷிங்டன், ஆலத்தூர் ஒன்றிய ஆணையர் பழனிச்சாமி ஆகியோர் விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பள்ளிக்கு நேற்று விடுமுறையும் விடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக