சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்த பிரச்னையில் கோர்ட் தீர்ப்பு வரும் முன்பே மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பழைய பாடத்திட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பழைய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்துவதா, பழைய பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்துவதா? என்பது குறித்து எவ்வித முடிவும் இன்னும் எட்டப்படவில்லை. பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அச்சிடக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதுவும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், திடீரென நேற்று ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட 30 ஆயிரம் பாடபுத்தகங்கள் கொண்டு வந்து அறையில் அடுக்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தின் படி அச்சிடப்பட்ட 30 ஆயிரம் பாட புத்தகங்கள் தற்போது வந்துள்ளது உண்மைதான். இதேபோன்று சமச்சீர் பாடத்திட்டத்தின் படி அச்சிடப்பட்ட 1 மற்றும் 6ம் வகுப்புக்கான சமச்சீர் பாடப்புத்தகங்களும் தற்போது வந்துள்ளன. கோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும், அதற்கேற்றபடி புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகம் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே புத்தகங்களை தமிழக அரசு அனுப்பி வைக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சமச்சீர் கல்வி அமலுக்கு வருமா, பழைய பாடத்திட்டத்தின் கீழ் பாடம் நடத்தப்படுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ள நிலையில் பழைய பாடத்திட்ட புத்தகங்களை தமிழக அரசு அனுப்பி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக