ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
தொழுகையும் உடல் ஆரோக்கியமும்
(ஸய்யத் மன்ஜூர் அஹ்மத்)

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் தொழுகையும் ஒன்று. தினமும் ஐந்துவேளை தொழ வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இக்கடமையை பேணி, அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலாவின் கட்டளைக்கு கீழ்பணிந்து தினம் ஐவேளை தொழுபவருக்கு, மறுமையில் ஏராளமான நற்பாக்கியங்கள் உண்டு. இம்மையிலும் ஏராளமான நற்பாக்கியங்கள் கிடைக்கும். இவ்விதம் கிடைக்கும் நற்பாக்கியங்கள் பற்றி திருக்குர்ஆனிலும், திருநபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளன. எனவே, தொழுகை இம்மை மறுமை நற்பேறுகளை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. மேலும், தொழுகையை பேணுபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை ‘ போனஸாகவும்’ வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான், தொழுகை, தொழுகையை பேணுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதாக இருப்பது! மருத்துவரீதியாக தொழுகை மனிதர்களுக்கு எவ்விதம் உடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்பதைத்தான் இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்!

நமது உடலில் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் யாவும் உள் உறுப்புகளாக அமைந்துள்ளன. கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்றவை புற உறுப்புகளாக உள்ளன. மேலும், உடல் முழுவதும் ஒரு போர்வை போல தோலால் மூடப்பட்டிருக்கிறது. மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் உடலுக்குள் பாதுகாப்பாக அமைந்திருந்தாலும், உடலின் புற உறுப்புகளால் இவைகள் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது! உதாரணமாக காற்றில் கலந்துள்ள கிருமிகள் மூக்கின் வழியாக உடலுக்குள் புகுந்து பல்வேறு உள் உறுப்புகளை பாதிக்கின்றன. பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. ஆகாரம் உண்ணும் போது பல்வேறு கிருமிகள் வாய் வழியே உடலுக்குள் புகுந்து உள் உறுப்புகளை பாதிப்படையச் செய்கின்றன. தோலில் ஏற்படும் காயங்கள் வழியாக பல்வேறு கிருமிகள் உடலுக்குள் புகுந்து பல்வேறு வியாதிகளை ஏற்படுத்துகின்றன. எனவே, முக்கிய உறுப்புகள் யாவும் உடலுக்குள் பாதுகாப்பாக இருக்கிறதே என்று யாரும் அலட்சியமாக இருந்திட முடியாது! இருக்கவும் கூடாது! மாறாக புற உறுப்புகளையும் நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்! உடலின் புற உறுப்புகளை நாம் பாதுகாக்க அவசியமானது உடல் சுத்தமாகும். உடல் சுத்தத்துடன் உடுத்தும் உடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். வசிக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுத்தம் தொழுகை மூலமாக நமக்குக் கிடைக்கிறது!

‘சுத்தம் சோறு போடும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களோ “பரிசுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும்” என்று சுத்தத்தை பிரதானப்படுத்திக் கூறியுள்ளார்கள்! காரணம், தொழுகைக்கு பரிசுத்தம் ஒரு நிபந்தனையாகும்! உடல் சுத்தமாக இருக்க வேண்டும். உடுத்திய உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். தொழக்கூடிய இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தொழுகை நிறைவேறும். சுத்தம் இல்லாமல் எந்த ஒரு தொழுகையும் நிறைவேறாது!

உடல் சுத்தம்:

மனிதர்களுக்கு நிறத்தையும் அழகையும் கொடுப்பது சருமமே ஆகும். மேலும், இந்த சருமம் முக்கியமான மூன்று வேலைகளையும் செய்கிறது. (1) மனித உடலை ஒரு கவசம் போல போர்த்தியபடி பாதுகாக்கிறது. (2) உடலின் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்வதில் உதவுகிறது. (3) வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு அதை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் ஆக்குகிறது. இத்துடன் உடல் ஸ்பரிசம், வலி, உஷ்ணம், குளிர்ச்சி போன்றவற்றையும் மனிதன் சருமம் மூலமாகவே அறிகிறான். இவற்றை மத்திய நரம்பு மண்டலத்திற்கு தெரிவிக்கும் உயிரணுக்கள் சருமம் முழுவதிலும் நிறைந்து இருக்கின்றன. இந்த சருமத்திலிருந்தே வியர்வை வெளியேறுகிறது. உடல் வறண்டு போகாமல் இருக்கவும், வெடிப்புக் காணாமல் இருக்கவும், சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாக இருக்கச் செய்யவும் ஒருவிதமான எண்ணெய்க் கசிவும் வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சருமத்தில் அழுக்கு படியும் போது சருமத் துவாரங்கள் எல்லாம் அடைபட்டுப் போகின்றன. இதன்காரணமாக பலவிதமான தோல் வியாதிகள் ஏற்பட்டு உடல் நலத்தைக் கெடுக்கின்றன. மேலும், சில தோல் வியாதிகள் தொற்று வியாதிகளாகவும் இருக்கின்றன. இதனால் பொது சுகாதாரமும் பாதிப்படைகிறது! குளித்து சருமத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் இத்தகைய தோல் வியாதிகளை தடுத்துவிடலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம்! பொதுச் சுகாதாரத்தையும் பேணலாம்!

இஸ்லாம் மார்க்கம், குளித்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதை ஒரு கடமையாகவே ஆக்கியிருக்கிறது! தொழுகைக்காக குளித்து உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது! எந்தெந்த காரியங்களினால் ஒருவருக்கு குளிப்பு கடமையாகிறது என்ற விவரத்தையும் கூறியிருக்கிறது! எவ்விதம் குளிப்பது என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறது! இனி, இதுகுறித்த விவரங்களை ஹதீஸ்கள் மூலமாக பார்க்கலாம்:

“ஒவ்வொரு ஏழு நாட்களில் ஒரு நாள் தன்னுடைய தலையையும், உடலையும் கழுவி குளிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ.

“ஸ்கலிதமாகிற ஒவ்வொருவரின் மீதும் ஜூம்ஆவின் நாளில் குளிப்பதும், இயலுமாயின் மிஸ்வாக்கு செய்தலும், வாசனையைப் பூசுவதும் அவசியம்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று சாட்சி கூறுகிறேன். அறிவிப்பவர்: அபூஸயீதினில் குத்ரீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ. இந்த ஹதீஸ்களில் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு முறையாவது குளிக்க வேண்டியது முஸ்லிம்கள் பேரில் கடமை எனக் கூறப்பட்டுள்ளது. ஜூம்ஆ தொழுகைக்காக ஜூம்ஆ நாளில் குளிக்க வேண்டியது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூம்ஆ நாளில் குளிப்பது சுன்னத்தான குளிப்பு என மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். இதைப்போலவே இரு பெருநாள் தொழுகைக்காக குளிப்பதும் சுன்னத்தான நடைமுறையே ஆகும்.

தாம்பத்திய உறவு கொண்டு அசுத்தமாக இருக்கும் நிலைக்கு பெருந்துடக்கு (ஜனாபத்) என்பர். பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் தொழுவது விலக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதில் பிரவேசிப்பதும் விலக்கப்பட்டுள்ளது. பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் குளித்து சுத்தமான பிறகே தொழ முடியும்! மஸ்ஜிதிலும் பிரவேசிக்க முடியும்! எனவே, பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் குளித்து சுத்தமாகவேண்டும்! இஸ்லாம் மார்க்கத்தில் பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் மீது குளிப்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலா திருக்குர்ஆனில், ஸூரத்துல் மாயிதா வசனம் – 6 ல், ‘நீங்கள் பெருந்துடக்குடையோராக இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்’ என்று அருளியுள்ளான். மேலும், நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, பின்னர் அவள்மீது தனது வலிமையைக் காட்டினாலே அவர் மீது குளியல் கடமையாகிவிடும்’. (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்). இப்படியாக பெருந்துடக்கு ஏற்பட்டவர்கள் கடமையை பேணியவர்களாக குளித்து சுத்தமாகிக் கொள்கிறார்கள்.

தூக்கஸ்கலிதம் ஏற்பட்டாலும் குளிப்பது கடமையாகும். ஏனெனில் இதுவும் பெருந்துடக்கே! குளிக்காமல் தொழக்கூடாது. மஸ்ஜிதில் பிரவேசிக்கவும் கூடாது! திருக்குர்ஆனை தொடக்கூடாது, ஓதவும்கூடாது! “ஒருவர் (தூக்கத்திலிருந்து விழித்து) ஈரத்தைக் கண்டு அவருக்கு ஸ்கலிதமானது நினைவுக்கு வரவில்லையானால் என்ன செய்வதென்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டதற்கு அவர்கள், “அவர் குளிக்கவும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: அபூதாவூத், திர்மிதீ). ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தூக்கஸ்கலிதம் ஏற்பட்டால் அவர்கள் பேரிலும் குளிப்பு கடமையாகும். ஒரு பெண்மணி நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம், “ஆண் தூக்கத்தில் காண்பதைப் பெண் கண்டால் (அவள் என்ன செய்ய வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆணுக்கு ஏற்படுவதைப் போன்றே பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவர் குளிக்க வேண்டும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்). இதன்காரணமாக தூக்கஸ்கலிதம் ஏற்பட்டவர்களும் கடமையைப் பேணி குளித்து சுத்தமாகிறார்கள்.

பெண்களுக்கு ஹைளூ என்னும் மாதவிடாய் ஏற்பட்டு அது நின்ற பிறகு குளிப்பது கடமையாகும். நிஃபாஸ் என்னும் பிரசவத் தீட்டு ஏற்பட்டு அது நின்றுபோனதும் குளிப்பதும் கடமையாகும். ஹைளூ, நிஃபாஸூடைய காலத்தில் பெண்களுக்கு தொழுகை மன்னிக்கப்பட்டுப் போகிறது! ஆனால், ஹைளூ, நிஃபாஸ் நின்றுபோனதும் குளித்து சுத்தமாகி தொழவேண்டியது கடமையாகும்! “மதீனாவின் ஆதரவாளர்களைச் சேர்ந்த ஒரு பெண் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் மாதவிடாய் குளிப்பைப் பற்றி வினவினார். அதற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், எவ்விதம் குளிக்க வேண்டுமென்று (அவருக்குக்) கட்டளையிட்டு, ‘நீர் கஸ்தூரி கலந்த சிறிது பஞ்சைக் கொண்டோ அல்லது கந்தையைக் கொண்டோ அதனைத் துப்புரவு செய்து கொள்ளும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ).இப்படியாக பெருந்துடக்குடையவர்கள் கடமையை பேணியவர்களாக குளித்து சுத்தமாக இருக்கிறார்கள்!

மேலும், காபிர் இஸ்லாத்தை தழுவியவுடன் குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். மய்யித்தை குளிப்பாட்டிய பிறகு குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். பராஅத் இரவில் குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.

லைலத்துல் கத்ரு தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். சூரிய கிரகண தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். பகலில் கடும் இருள் சூழ்ந்துவிட்டால் அதை நீக்கத் தேடும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். மழை பொழியத் தேடும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். திடுக்கம் நீங்கத் தொழும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.

புயல் காற்று விலகிட தொழும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக குளிப்பும், அதன் மூலமாக உடல் சுத்தமும் பேணப்படுகிறது!

குளிக்கும் முறை:
நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குளிக்கும் முறையையும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நிர்வாணமாக குளிக்கக்கூடாது. ஒவ்வொரு முடியின் அடிவரை கழுவிக் குளிக்கவேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இப்படி குளிப்பு பற்றிய பல்வேறு விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இவை குறித்த சில ஹதீஸ்கள்: “ஒருவர் நிர்வாணமாகக் குளிப்பதைக் கண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், மிம்பர் (மேடை) மீது ஏறி (நின்று) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைத் துதி செய்து பின்னர், “நிச்சயமாக அல்லாஹ் நாணமுறுபவனும் திரை மறைவிலிருப்பவனுமாவான். (அன்றி) அவன் நாணமுறுவதையும் திரை மறைவையும் நேசிப்பவனாக இருக்கிறான். எனவே உங்களில் எவரேனும் குளிக்க நாடினால் திரை மறைவில் (கீழாடை அணிந்தவண்ணம்) குளிக்கவும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: யஃலா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: அபூதாவூத், நஸாயீ). “ஒவ்வொரு முடியின் அடியிலும் குளிப்பு விதியாகி விடுகிறது. எனவே முடியின் அடிவரைக் கழுவுங்கள்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: அபூதாவூத், திர்மிதீ). “‘முழுக்குக்கான குளிப்பில் ஒரு முடி அளவுள்ள இடத்தைக் கழுவாமல் எவர் விட்டு விடுகிறாரோ அவருக்கு நரகத்தில் இன்ன இன்ன விதமாக வேதனை செய்யப்படும்’ என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் தெரிவித்து, இதற்காகத்தான் தாம் தம் தலைமுடியை எடுத்து விட்டதாக மூன்று முறை கூறினார்கள்”. (அறிவிப்பவர்களும் அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்களே, நூல்: அபூதாவூத்).

நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்குக்காக குளித்தால் தங்களது இரு கரங்களையும் (மணிக்கட்டுவரை முதலில்) கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூ செய்வது போல உளூ செய்வார்கள். பின்னர் குளிப்பார்கள். பின்னர் தங்கள் இரு கைகளால் தங்கள் ரோமங்களைக் கோதிவிடுவார்கள். அதன் ரோமக்கால்கள் நனைந்துவிட்டன என்பதை உணர்ந்தால், அதன் மீது மூன்று முறை தண்ணீர் வார்த்துக் கொள்வார்கள். பின்னர் தங்கள் உடல் முழுவதிலும் (நனைத்துக்) குளிப்பார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ). “தொழுகைக்கு உளூ செய்வது போல நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கால் நீங்கலாக உளூ செய்தார்கள். தங்கள் வெட்கஸ்தலத்தையும், அசுத்தம் பட்ட இடத்தையும் கழுவினார்கள். பின்னர் தங்கள் மீது தண்ணீர் வார்த்துக் கொண்டார்கள். பின்னர் தங்கள் கால்களை (கொஞ்சம்) நகர்த்தி அவைகளைக் கழுவினார்கள்”. (அறிவிப்பவர்: மைமூனா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ). இப்படியாக நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு பற்றிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அன்னாரின் நடைமுறைகளை பேணியவர்களாக முஸ்லிம்கள் அனைவரும் குளித்து சுத்தத்தைப் பேணுகிறார்கள்!

மலம், சிறுநீர் சுத்தம் செய்தல்: மலம், சிறுநீர் ஆகிய இரண்டும் அசுத்தங்களாகும்! உடலில் அல்லது உடையில் இந்த அசுத்தங்கள் இருக்கும் நிலையில் தொழமுடியாது. எனவே, இவ்விரண்டையும் துப்புரவு செய்வது கட்டாயமாகும்! நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மலம், சிறுநீர் கழிக்கச் சென்றால், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். “நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மல உபாதை கழிக்கச் சென்றால், நானும் என்னுடன் ஒரு பையனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்வோம். தண்ணீரால் அவர்கள் சுத்தம் செய்வார்கள்”. (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ). சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாதவர்களுக்கு கப்ருக்குள் (சவக்குழிக்குள்) வேதனை செய்யப்படுவார்கள். ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரு அடக்கத் தலங்களைத் கடந்து சென்றார்கள். அப்போது, “அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (கப்ருக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துக் கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர கழித்துவிட்டு சுத்தம் செய்யமாட்டார்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்). மலம், சிறுநீர கழித்த பிறகு வலக் கரத்தால் சுத்தம் செய்யக் கூடாது! “உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது அவர் தமது பிறவி உறுப்பை வலது கையினால் பிடிக்க வேண்டாம். மலம் சிறுநீர் கழித்த பிறகு வலது கையினால் சுத்தம் செய்ய வேண்டாம்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகத்தாதா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்). மலம் கழுவி சுத்தம் செய்த பிறகு இடது கையையும் தேய்த்து கழுவவேண்டும். “(ஒரு சமயம்) நான் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்பொழுது அவர்கள் மல உபாதை கழிக்கச் சென்றார்கள். மலம் கழித்த பிறகு, “ஜரீரே! தண்ணீர் கொண்டு வாரும்” என்று கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்துகொண்டனர். பின்னர் தங்களின் இடது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள்”. (அறிவிப்பவர்: ஜரீர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: நஸாயீ). இப்படியாக மலம், சிறுநீர் கழிப்பதிலும் சுத்தம் பேணப்படுகிறது!

மிஸ்வாக்:
உலகத்திலேயே மிக அதிகமான மக்களுக்கு இருக்கும் நோய் பற்சொத்தையாகும்! பற்சொத்தை வராமலிருக்க தினமும் காலையிலும், இரவு படுக்கப் போகும் முன்பாகவும் பற்களைத் துலக்க வேண்டும் என பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நமக்கு, ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்யும் முன்பாக பல் துலக்குவது சுன்னத்தாக (நபிவழியாக) இருக்கிறது. நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்படும் என்னும் அச்சத்தினாலேயே ஒவ்வொரு தொழுகைக்கு உளூ செய்யும் போதும் மிஸ்வாக் செய்வதைப் பற்றி கட்டளையிடவில்லை! “இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லது என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்யுமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்) தினமும் ஐவேளை உளுவுக்கு முன்னால் மிஸ்வாக் செய்வது பற்றி கட்டளையிடப்படவில்லை. ஆனால், தினமும் ஐவேளைத் தொழுகைக்காக ஐந்து முறை பல் துலக்கி சுத்தம் செய்வது வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். “எந்த தொழுகை (யின் உளூ) யில் மிஸ்வாக்குச் செய்யப்பட்டதோ அத்தொழுகை (உளூவில்) மிஸ்வாக்குச் செய்யப்படாத தொழுகையை விட எழுபது மடங்கு சிறப்பு (தவாபைப்) பெறும்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: ஷூஃபுல் ஈமான் பைஹக்கீ). “எனது உம்மத்தினருக்கு சிரமம் கொடுப்பதை நான் அஞ்சவில்லை என்றால் ஒவ்வொரு தொழுகை (அல்லது அதன் உளூ) நேரத்திலும் மிஸ்வாக்குச் செய்யுமாறு (கடமையாக்கி) ஏவி இருப்பேன்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸலமா (ரஹ்) அவர்கள், நூல்: திர்மிதீ, அபூதாவூது). மேலும், ஐந்து நேரங்களில் மிஸ்வாக்கினால் பல் துலக்குவது மிகவும் விரும்பத்தக்க செயலாகும் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். (1) உளு செய்யும் போது. (2) தொழுகைக்காக நிற்கும் போது. (3) திருக்குர்ஆன் ஓதும் போது. (4) தூங்கி எழும் போது. (5) நீண்ட நேரம் சாப்பிடாததால், அல்லது துர்வாடை உள்ள பொருட்களை சாப்பிட்டால், அல்லது நீண்ட நேரம் வாய் மூடி இருந்தால், அல்லது அதிகமாகப் பேசியதால் வாயில் வாடை வரும்போது. (அல்மின்ஹாஜ்)

“நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் (நித்திரையிலிருந்து) எழுந்தால் மிஸ்வாக்கினால் வாயைச் சுத்தஞ் செய்பவர்களாக இருந்தார்கள்”. (அறிவிப்பவர்: ஹூதைஃபா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்). “மிஸ்வாக்குச் செய்வது வாயை சுத்தமாக்குவதாகவும், அல்லாஹ்வின் பொருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: ஷாபீ, அஹ்மது, தாரிமீ, நஸயீ). “இரவு பகல் (எந்நேரத்திலும்) தூக்கத்திலிருந்து விழிக்கும் போது நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உளூ செய்யும் முன்பாக மிஸ்வாக் செய்தே அன்றி இருக்க மாட்டார்கள்”. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: அஹ்மது, அபூதாவூது). இப்படியாக ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்யும் முன்பாக மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்கி சுத்தம் செய்வது நபிவழியாக உள்ளது!

மிஸ்வாக் குச்சியினால் பற்களைச் சுத்தம் செய்வதில் எழுபது நற்பலன்கள் உண்டு என்றும், அவைகளில் சிறு பலன் உயிர் பிரியும் போது ஷஹாதத் கலிமாவை நினைவூட்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதம், யூனானி மருத்துவ முறையிலும் மிஸ்வாக் குச்சியின் பயன்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது! இவை தவிர வேறு சில பயன்களும் உள்ளன. பற்களை மேல் கீழாகத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பக்கவாட்டில் மட்டும் தேய்த்தால் பற்களுக்கு இடையேயுள்ள இடுக்குகள் சுத்தமாகாது என்று பல் மருத்துவர்கள் கூறுவார்கள். மிஸ்வாக் குச்சியினால் எளிதாக பற்களை மேலும் கீழுமாக தேய்க்க முடியும்! பற்களுக்கு வெளிப்புறம் மட்டுமின்றி, உட்பக்கங்களையும் துலக்க வேண்டும் என்பார்கள். மிஸ்வாக் குச்சியினால் எளிதாக உட்பக்கங்களையும் சுத்தம் செய்ய முடியும். மேலும், கீழ் கடைவாய்ப் பற்களின் மேல்பரப்பையும், மேல் கடைவாய்ப் பற்களின் கீழ் பரப்பையும் துலக்க வேண்டும். இந்த வசதியும் மிஸ்வாக் குச்சியில் இருக்கிறது! இப்படியாக, வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள மிஸ்வாக் உதவுகிறது!

உளூ:
புற உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உளூ உதவுகிறது! எந்த ஒரு தொழுகையும் நிறைவேற வேண்டுமானால் அதற்கு உளூ அவசியமாகும். இது குறித்து திருக்குர்ஆனில், ‘முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும் போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹூ செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) ‘ என்று கூறப்பட்டுள்ளது. (காண்க: ஸூரத்துல் மாயிதா, வசனம்: 6). “உளூ செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஸ்அப் பின் ஸஅத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், நூல்: முஸ்லிம்).

ஒருவர் தொழுவதற்கு முன்னால் தன் கைகள், கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகளை, அதற்கான ஒழுங்கு முறைப்படிக் கழுவிச் சுத்தம் செய்வதற்கே ‘உளூ’ என்பார்கள். இவ்வாறு தூய்மை செய்யாமல் ஒருவர் தொழுதால், அவரது தொழுகை செல்லாது. இது கட்டாயத் தொழுகை, விருப்பத் தொழுகை, இறுதித் தொழுகை (ஜனாஸா), ஸஜ்தா திலாவத் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும். (அல்மின்ஹாஜ்). உளூ செய்யும் முறை பின் வரும் ஹதீஸில் கூறப்படுகிறது: ‘உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் உளூ செய்வதற்காகத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உளூ செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்துத் தமது இடக்கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸஹூ செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் அதைப் போன்றே (கணுக்கால் வரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர், “நான் செய்த இந்த உளூவைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் உளூ செய்ததை நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யார் நான் செய்த இந்த உளூவைப் போன்று உளூ செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்” என்று கூறனார்கள். முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹூம்ரான் பின் அபான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இவ்விதம் செய்யப்படும் உளூவின் மூலம் புற உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்ற உறுப்புகள் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன! உளூவில் முதலாவதாக மணிக்கட்டுவரை கைகள் மூன்று முறை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன. கைகள் மூலமாக பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன! மனித உயிர்களுக்கு கேடு விளைவிக்கின்றன! இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15 ந் தேதியை ‘உலக கை கழுவுதல் தினம்’ (GLOBAL HAND WASHING DAY) என உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது! கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தப்படுகிறது. ஆனால் இந்த சுத்தம் தொழுகைக்கான உளூவின் மூலமாக தினமும் ஐந்து முறை உலக முஸ்லிம்களால் பேணப்படுகிறது! மேலும், தூங்கி விழித்து எழுந்ததும் முதலில் கைகளை மூன்று முறை கழுவ வேண்டும், குளிக்கும் முன் கைகளை கழுவ வேண்டும், சாப்பிடும் முன்பாக கைகளை கழுவ வேண்டும், சாப்பிட்ட பிறகும் கைகளை கழுவ வேண்டும் என்பன போன்ற ஒழுக்க முறைகளையும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்!

உளூவில் அடுத்ததாக மூன்று முறை வாய் கொப்பளித்து, மூக்கிற்குள் நீர் செலுத்தி, மூக்குச் சிந்தி சுத்தம் செய்யப்படுகிறது. உளூவிற்கு முன்பாக மிஸ்வாக் குச்சியினால் பற்கள் சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது. இப்பொழுது வாய் கொப்பளித்து வாயும் சுத்தம் செய்யப்படுகிறது! அடுத்து மூக்கை சுத்தம் செய்வது! மூக்கின் மூலமாகவே சுவாசமும் நடைபெறுகிறது. மூக்கின் மூலமாகவே வாசனைகளை அறிய முடிகிறது! மேலும், மூக்கு காற்றிலே கலந்திருக்கும் தூசி போன்ற அசுத்தங்களை சுத்தம் செய்து, பின்னரே காற்றை உள்ளே செலுத்துகிறது. இதற்காக மூக்கின் முனைப்பாகத்தில் மயிரிழைகளை உள்ளன. மேலும், வெளிக் காற்றின் அதிகப்படியான வெப்ப நிலையை ‘ஏர்கண்டிஷன்’ போல குளிர்வித்து, உடலுக்கு உகந்த வெப்ப நிலைக்கு மாற்றி அனுப்புகிறது. இதற்கு வசதியாக மூக்கினுள்ளே ஒரு திரவம் (சளி) சுரக்கிறது! இப்படி மூக்கினுள்ளே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால்தான் மூக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்! நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “எவர் உளூச் செய்ய நாடுகிறாரோ அவர் மூக்குக்குத் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தி சுத்தம் செய்யவும்” என்று கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸாயீ).

உளூவில் அடுத்தபடியாக முகம், மூன்று முறை கழுவப்படுகிறது. முன் தலையிலிருந்து தாடை வரையிலும், ஒரு காதின் முனையிலிருந்து மறு காதின் முனை வரையிலும் முகம் கழுவிட வேண்டும். இவ்விதம் கழுவிடும் போது முகத்துடன் கண்களும் சுத்தம் செய்யப்படுகின்றன! கண் ஒரு மென்மையான அவயம். இதனை வெகு கவனமாக பாதுகாக்க வேண்டும்! தூசி, புகை போன்றவற்றால் கெடுதல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். உளூ செய்வதன் மூலம் கண்களும் பாதுகாக்கப் படுகின்றன! மேலும், மீண்டும் மீண்டும் முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதால் முகப்பரு, வேர்க்குரு போன்ற சரும நோய்களும் ஏற்படுவதில்லை!

அடுத்து, இரண்டு கைகளும் முழங்கை மூட்டு வரை கழுவப்படுகின்றன. முதலில் வலது கையை முழங்கை மூட்டுவரை கழுவ வேண்டும். பிறகு இடது கையை முழங்கை மூட்டு வரை கழுவ வேண்டும். இவ்விதமாக இரண்டு கைகளும் முழங்கை மூட்டு வரை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன! அடுத்து தலைக்கு மஸஹூ செய்ய வேண்டும். தலைக்கு மஸஹூ செய்யும் போது காதுகளின் துளைகளிலும் விரல்களை நுழைத்து சுத்தம் பேணப்படுகிறது. காதும் ஒரு முக்கியமான உறுப்பாகும். இதையும் கவனமாக பாதுகாக்க வேண்டும். காதில் எதையாவது போட்டு குடைந்துக் கொண்டிருக்கக் கூடாது! மேலும், காதின் உட்பக்கத்துத் துவாரத்தில் குறும்பி எனப்படும் ஒருவித மெழுகு சுரக்கும். அளவுக்கும் அதிகமாக குறும்பி சேர்ந்தால் அதை சுத்தம் செய்ய வேண்டும்! புறச் செவியில் அழுக்கும் சேறும்! இதையும் சுத்தம் செய்ய வேண்டும்! இல்லாவிட்டால் ஒரு விதமான அரிப்பு ஏற்படும்! புண்ணும் ஏற்படலாம். எனவே காதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உளூவின் மூலம் காதின் சுத்தமும் பேணப்படுகிறது. நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உளூச் செய்யும் போழுது தங்களின் இரு விரல்களைத் தங்களின் இரண்டு காதுகளின் துளையிலும் நுழைத்தார்கள்” என ரபீஉ பின்து முஅவித் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத். மேலும், “இப்னு உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் தம் இரு காதுகளுக்காகத் தம் இரு விரல்களில் தண்ணீர் எடுத்தனர்” என நாபிஃ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். நூல்: முஅத்தா. இவ்விதமாக காதுகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.

அடுத்து, இரு கால்களும் கணுக்கால்கள் வரை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன! சாதாரணமாக எல்லோருமே கால்களை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் சர்க்கரை வியாதி (நீரிழிவு) உள்ளவர்கள் தமது பாதங்களை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறுவார்கள். உளூவின் மூலம் பாதங்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள முடியும்! உளூவில் இரண்டு கால்களும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன. கால்களை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ‘ஒரு மனிதர் உளூ செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார். (அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல: முஸ்லிம்). ‘தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்து கொண்டிருந்)த ஒரு மனிதரை நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள். அப்போது, “(உளூவில் சரியாக கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைர ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்). உளூவில், கால்களை கழுவுவதில் அலட்சியம் காட்டுபவர்களுக்கு நரக வேதனைதான் என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதால் உளூ செய்பவர்கள் கால்களை கவனமாக, முழுமையாகக் கழுவி சுத்தம் செய்கிறார்கள்.

இவ்விதம் கண், காது, மூக்கு, கைகள், கால்கள் போன்ற புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உளூவை, தினமும் ஐவேளை தொழுகைகளுக்காக ஐந்து முறை செய்திட வேண்டும். ஆயினும், உளூ சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்பட்டு முறிந்துவிடும் போது மறுபடியும் உளூ செய்திட வேண்டும். இவ்விதம் மறுபடியும் உளூ செய்யாத வரை தொழுகை ஏற்கப்படாது! உடலிலிருந்து சிறுநீர், மலம், பின் துவாரத்திலிருந்து வாயு ஆகியவை வெளியேறுவதற்கே சிறு துடக்கு (ஹதஸ்) என்பார்கள். இவ்விதம் சிறு துடக்கு ஏற்படும் போது ஏற்கெனவே செய்த உளூ முறிந்துவிடும்! எனவே மறுபடியும் உளூ செய்தால்தான் தொழுகை கூடும். “உங்களில் ஒருவருக்கு சிறு துடக்கு ஏற்பட்டு விட்டால், அவர் உளூ செய்து கொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்). இதன் காரணமாக புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கூடுகிறது!

உடல் ஆரோக்கியத்திற்கு உடல் சுத்தம் தேவை! உடல் சுத்தமே தொழுகைக்கு தேவை! குளிப்பு, உளூவின் மூலம் உடல் சுத்தம் கிடைக்கிறது! எனவேதான் தொழுகை உடல் ஆரோக்கியத்தை பேணக் கூடியதாக இருக்கிறது எனக் கூறப்பட்டது!

உடை சுத்தம்:

“கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்பார்கள். இது, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டியதும் அவசியமாகும். அணியும் ஆடைகளில் சுத்தம் பேணவேண்டியது தொழுகையின் (வெளிக்) கடமைகளில் ஒன்றாகும்! ‘ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்’ என்று திருக்குர்ஆனிலே ஸூரத்துல் அஃராஃப், வசனம் 31 ல் அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலா கூறியுள்ளான். “உங்கள் ஆடைகளை அழகாக்கிக் கொள்ளுங்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஹள்ளலிய்யா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: ஹாகிம்). ஆடையில்லாமல் – நிர்வாணமாக ஒரு போதும் தொழக்கூடாது! இரண்டு தோள்கள் திறந்த நிலையிலும் தொழுக்கூடாது. “உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்). ‘நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே துணியில் தொழுதார்கள். ஆனால் இரண்டு ஓரங்களுக்கும் இடையில் வித்தியாசப் படுத்தினார்கள். (அதாவது வேஷ்டியை இரண்டு பாகமாக்கி ஒன்றை உடுத்திக் கொண்டு மற்றொன்றை மேலில் போட்டுக் கொண்டார்கள்). அறிவிப்பவர்: உமறுப்னு அபீஸலமா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ. வசதி இருந்தால் குறைந்தது இரு ஆடைகளைக் கீழும் மேலுமாக அணிந்து கொண்டு தொழுவதே சிறந்தது ஆகும். இரு ஆடைகளுக்கு வா்ப்பில்லாத போது ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதில் குற்றமில்லை. அந்த ஓர் ஆடையை தோளை மறைக்கும் வகையில் கட்டிக் கொண்டு, மறைக்க வேண்டிய உறுப்புகள் வெளியே தெரியாதபடி அணிந்து தொழ வேண்டும்’ என அல்மின்ஹாஜில் கூறப்பட்டுள்ளது.

ஜூம்ஆ தொழுகைக்கு அணிந்து கொள்வதற்காக தம்மிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இது குறித்து நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்களில் எவரும் தாம் வேலை செய்யும் போது அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர வெள்ளிக் கிழமைகளில் அணிந்து கொள்வதற்காக இரண்டு ஆடைகளை(த் தயாரித்து) வைத்துக் கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை” எனக் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: முஹம்மதுப்னு யஹ்யா இப்னு ஹப்பான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: அபூதாவூத்). மேலும், நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பினார்கள். “எங்களில் ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த எங்களின் சகா ஒருவரை நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டனர். அப்போது அவர் இரண்டு பழைய ஆடைகளை அணிந்திருந்தார். எனவே நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், “அவிவிரண்டையும் தவிர்த்து வேறு ஆடைகள் ஏதுமில்லையா?” எனக் கேட்டார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஅத்தா).

மலம், சிறுநீர், இரத்தம், இந்திரியம் போன்றவை அசுத்தங்களே ஆகும். இத்தகைய அசுத்தங்கள் பட்ட ஆடைகளுடன் தொழுக்கூடாது. எனவே, இவை ஆடைகளில் பட்டுவிட்டால் கழுவி சுத்தம் செய்த பிறகே அணிந்து தொழ வேண்டும். “நான் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடையில் இருக்கும் இந்திரியத்தைக் கழுவுவேன். அவர்கள் தங்களின் ஆடை காய்வதற்குள் தொழச் செல்வார்கள்”. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ). “நம்மில் எவருக்கேனும் மாதவிடாய் வந்துவிடின், மாதவிடாயை விட்டும் துப்புரவாகும் போது, அந்தத் துணியிலிருந்த இரத்தத்தைச் சுரண்டி அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தைக் கழுவி, மீதமுள்ள இடத்தில் தண்ணீரைத் தெளித்துப் பின்னர் அதனை உடுத்திக் கொண்டு தொழுததுண்டு”. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ). மேலும், காயாத அசுத்தத்தின் மீது ஆடை பட்டுவிட்டாலும் அதைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். “நீர், காயாத அசுத்தத்தின் மீது நடந்தாலோ, அல்லது உம்முடைய ஆடை அதன்மீது இழுபட்டாலோ கழுவிவிடும். ஆனால் அது (அசுத்தப் பொருள்) காய்ந்ததாக இருப்பின் உம்மீது யாதொரு குற்றமுமில்லை”. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், நூல்: ரஜீன்). இவ்வாறெல்லாம் ஆடைகளிலுள்ள அசுத்தங்கள் யாவும் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. உடுத்தும் ஆடைகளிலும் சுத்தம் பேணப்படுகிறது! சுத்தமான ஆடைகள் மூலமாக ஆரோக்கியமும் காக்கப்படுகிறது!

இடம் சுத்தம்:

தொழும் இடம் சுத்தமாக இருக்க வேண்டியதும் தொழுகையின் (வெளிக்) கடமைகளில் உள்ளதாகும். நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த பூமி முழுவதும் பள்ளியாகவும் தூய்மையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. எனவே, எங்கு தொழுகையின் நேரம் வந்து விடுகிறதோ அங்கேயே தொழுது கொள்ளலாம். ஆயினும் சில இடங்களில் தொழுவதை விட்டும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். “ஏழு இடங்களில் தொழுவதை நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தனர். (1) மலஜலம் கழிக்கும் இடங்கள் (2) கால்நடைகள் அறுக்கப்படும் இடங்கள் (3) புதை குழிகள் (கப்ருஸ்தான்கள்) (4) நடுவீதி (5) குளியலறை (6) ஒட்டகங்கள் கட்டும் இடங்கள் (7) கஃபாவின் முகடு ஆகியவையாம்”. (அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: திர்மிதீ).

தொழும் இடங்களான மஸ்ஜித்களை சுத்தப்படுத்துமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். “வீடுகள் உள்ள பகுதிகளில் மஸ்ஜித்களை கட்டும்படியும், அவற்றை சுத்தப்படுத்துமாறும், அவற்றில் நறுமணங்களை பயன்படுத்துமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஏவினார்கள்” என அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளனர். நூல்: அஹ்மது, திர்மிதீ, அபூதாவூது, இப்னுமாஜா.

தொழுகைகளில் சிலவற்றை வீடுகளில் தொழும்படியும், வீடுகளை அழகாக வைக்கும்படியும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். “உங்களுடைய வீடுகளிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். வீடுகளை (தொழுகை நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியலலாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்). “உங்கள் ஆடைகளை அழகாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை சீராக்குங்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஹள்ளலிய்யா அவர்கள், நூல்: ஹாகிம்). தொழும் விரிப்புகளை சுத்தம் செய்திடுமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்த ஹதீஸ்: ‘நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவர்களாக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது சில நேரங்களில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக