இந்தியாவின் உள்ளூர் போட்டியொன்றில் பங்குபற்றிக் கொண்டிருந்த கால்பந்தாட்ட வீரரொருவர் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். பெங்களூர் கால்பந்தாட்ட மைதானத்தில் நேற்று இடம்பெற்ற லீக் போட்டியொன்றின் போதே இவ்வீரர் மரணமடைந்துள்ளார்.
பெங்களூரிலுள்ள முதல்நிலைக் கழகமான பெங்களூர் மார்ஸ் கழகத்தின் மத்திய கள வீரரான வெங்கடேஷ் என்ற 27 வயது கால்பந்தாட்ட வீரரே மரணமடைந்துள்ளார். 73ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக் களமிறங்கிய குறித்த வீரர், போட்டி நேரத்தின் போதே நிலத்தில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.
சாதாரணமான வழக்கங்களின்படி போட்டியொன்றின் போது வழங்கப்பட வேண்டிய மருத்துவர் வசதி - குறித்த போட்டியின் போது வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சக வீரர்களும், உடற்கூற்று நிபுணர்களும் தங்களால் இயன்றளவு முயன்றதாகவும், அப்போது வெங்கடேஷிற்கு வலிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் சக வீரரொருவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முயன்ற போதிலும், அங்கு அம்புலன்ஸ் வசதியும் காணப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் இக்குற்றச்சாட்டை பெங்களூர் மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் மறுத்தது. அங்கு அம்புலன்ஸ் காணப்பட்டதாகவும், எனினும் அம்புலன்ஸை சுற்றி ஏராளமான மோட்டார் வண்டிகள் காணப்பட்டதாகவும், அதன் காரணமாக அம்புலன்ஸை உரிய நேரத்தில் எடுக்க முடியாது போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் வீரர்களும், போட்டி ஊழியர்களும் அவரைக் கையில் ஏந்தி முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும், வைத்தியசாலையை அடைந்த போது அவர் மரணமடைந்திருந்தார். திடீரென ஏற்பட்ட நெஞ்சடைப்பால் அவர் மணரமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய சிகிச்சையை மைதானத்தில் வைத்து வழங்கியிருந்தால் வெங்கடேஷைக் காப்பாற்றியிருக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக