யாழ். பொது நூலகத்தைப் பார்வையிடச் செல்லும் சிங்கள மக்களால் அவதானிக்கப்பட்ட பின்னர் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்தது. சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டது என்ற வாசகம் அடங்கிய கட்அவுட் நூலக முன்றிலில் இருந்து நூலக அதிகாரிகளினால் அகற்றப்பட்டுள்ளது.
பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் திட்டமிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக புத்தஜீவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.கடந்த 81 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டது. அந்த வரலாற்றுச் சம்பவத்தை சித்திரிக்கும் புகைப்படங்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான கட்அவுட் ஒன்று நூலகத்தின் முன்றிலில் வைக்கப்பட்டிருந்தது.
அதில், சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்ட நூலகத்தின் தோற்றம் எனக் குறிப்பிட்டு எரிந்த நூலகத்தின் தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த வாசகத்தை மறைத்து இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த வாசகத்தை மூடி அதற்கு மேல் புனரமைப்புக்கு முன்னைய தோற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வாசகம் மாற்றி எழுதப்பட்டதன் பின்னர் அந்தக் கட்அவுட் தொடர்பாக புத்திஜீவிகள், ஊடக வியலாளர்கள், நூலகவாசகர்கள் பல்வேறு அபிப்பிரா யங்களைத் தெரிவித்ததை அடுத்து தற்போது அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அகற்ற ப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நூலகர் திருமதி இமெல்டா கருணாகரனிடம் கேட்டபோது:
வாசகம் மாற்றப்பட்டதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கும் அரசியல் காரணம் எதுவும் இருக்கவில்லை. எமது நூலகத்தில் நிர்வாகத்தின் முடிவின் பிரகாரமே அது மாற்றப்பட்டுள்ளது. தென்னிலங்கை யிலிருந்துவரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் சிங்களக் காடையர்கள் என்ற வாசகத்தால் குழப்பம் அடைந்தனர். தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் ஆறு மாதங்களுக்கு முன்னரே அந்தக் கட்அவுட்டை வாசகர் பார்வையிலிருந்து அகற்றிவிட்டோம்.
நூலகத்தைத் துப்புரவு செய்யும் பணி இடம்பெற்றது. அதன் காரணமாக நூலகத்தினுள்ளே மறைவாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்அவுட்டைத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் வெளியே வைத்துவிட்டனர். அந்தக் கட்அவுட்டில் வாசக மாற்றத்தை நாமே மேற்கொண்டிருந்தோம்.
தற்போது மீளவும் அது நூலகத்தினுள்ளே வாசகர் பார்வைக்கு தெரியாமல் வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, யாழ். பொது நூலகத்தைத் தினசரி 500க்கும் அதிகமான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
அதே வேளை அரச அதிகாரிகளின் கூட்டங்கள் பல நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்று வருகின்றன.
அவர் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் பங்குபற்றி வருகின்றனர்.இந்த நிலையிலேயே காட்சிப்படுத்தப்பட்ட கட்அவுட்டில் வாசகம் மாற்றப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக