ரோட் ட்ரிப் படம் என்பதால் ஜாலியாக மட்டும் இருக்கும். லாஜிக்கை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. பொழுதுபோக்குக்கு கியாரண்டி தந்தாலே போதும் என்று எண்ணினால், அதையும் தாண்டி சென்சிபில் ஆகவும் படம் ஆக்கி உள்ளார் (பெண்) இயக்குனர் ஜோயா அக்தர். இந்தியாவின் தலைசிறந்த கதை மற்றும் பாடலாசிரியரான ஜாவெத் அக்தரின் புதல்வி. அது மட்டுமல்ல. பாலிவுட்டில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என சகலகலா வல்லவராக இருக்கும் பரான் அக்தருடன் பிறந்த ட்வின் சிஸ்டர். இப்படத்தின் பாடல் மற்றும் கவிதைகளை எழுதி இருப்பவர் ஜாவெத் அக்தர். தயாரிப்பும் இவர்களுடையதுதான்.
கபீர்(அப்பே தியோல்), இம்ரான் (பரான் அக்தர்), அர்ஜுன் (ஹ்ரித்திக் ரோஷன்) மூவரும் நண்பர்கள். திருமணம் நிச்சயம் ஆன மகிழ்ச்சியை கொண்டாட ஸ்பெயினில் ரோட் ட்ரிப் செல்ல முடிவெடுக்கிறான் கபீர். தன் தாயை விட்டுப்பிரிந்த தந்தை(நஸ்ருதீன் ஷா) ஸ்பெயினில் இருப்பதால் இம்ரான் ஸ்பெயின் செல்ல சரி என்கிறான். பொருள் ஈட்டுவதே வாழ்வில் பிரதானம் என எண்ணும் அர்ஜுன் முதலில் தயங்கினாலும் பிறகு ரோட் ட்ரிப்புக்கு சம்மதிக்கிறான். அங்கே அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்டர் ஆக அறிமுகம் ஆகிறார் கத்ரீனா கைப். ட்ரிப் முடிகையில் மூவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதே கதை.
ஸ்பெயின் தேசத்து நவீன கட்டிடங்கள் மற்றும் நகரங்களை தவிர்த்து விட்டு, ரோட் ட்ரிப் படத்திற்கு தேவையான இடங்களை மட்டும் தேர்வு செய்து இருப்பதை பாராட்ட வேண்டும். பிரசித்தி பெற்ற தக்காளி திருவிழா, ஸ்கை டைவிங், பாம்ப்லோனா நகரில் நடக்கும் ‘Bull Running’, கடல் சாகசம் என பல்வேறு காட்சிகளை அழகாக படம் ஆக்கியுள்ளனர். ஸ்கை டைவிங் காட்சியில் மூவரும் அந்தரத்தில் மிதக்கும் காட்சி பரவசத்தின் உச்சம். முன்னணி நட்சத்திரங்களாக இருப்பினும் கதைக்கு தேவையான அளவு மட்டும் நடித்துள்ளனர் ஹ்ரிதிக்கும், காத்ரீனாவும். ‘பேரழகி காத்ரீனா ஸ்க்ரீனில் வந்தாலே போதும் ரசிகர்களுக்கு’ என்று சும்மாவா சொன்னார்கள். ‘ஸ்டீலிங் தெ ஷோ’ என்பார்களே, அதுபோல இப்படத்தில் கலக்கி இருப்பவர் பரான் அக்தர். படம் நெடுக நகைச்சுவை ஜாலம் செய்திருக்கிறார்.
இப்படத்தை லைவ்வாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு பின்னணி இசையை சாரும். இசை மும்மூர்த்திகள் சங்கர் – எஷான் – லாய் ஆகியோருக்கு ஹாட்ஸ் ஆப். செயற்கையான ஒளிகளை திணிக்காமல் ஸ்பெயினை சுற்றிக்காட்டி உள்ளார் அயல்நாட்டு ஒளிப்பதிவாளர் கார்லஸ் (உலக சினிமா ஒளிப்பதிவர்களுக்கான விழாவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்). படம் முடிந்ததும் அதில் வேலை செய்தவர்கள் லிஸ்ட்டை சில கிலோமீட்டர் நீளத்திற்கு போட்டனர். மிகப்பெரிய வெளிநாட்டு டீம் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களுடன் உழைத்திருக்கிறது. அதற்கு கிடைத்த வெற்றிதான் Zindagi Na Milegi Dobara படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன். அழகிய ஸ்பெயின், நல்ல பொழுதுபோக்கு, மிகையில்லா நடிப்பு, அர்த்தமுள்ள வசனங்கள் என அனைத்தையும் கலந்த ஒரு படம் பார்த்த நிறைவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக