சென்னை, இந்தியா: தி.மு.க. வட்டாரங்களில் இப்போது கிசுகிசுப்பாகப் பேசப்படும் விஷயம், “தலைவர் சீக்கிரம் கனிமொழியை வெளியே கொண்டுவரப் போறாரு, அதுக்கப்புறம் பாருங்க தி.மு.க.வோட ஸ்பீடை” இவர்களது கிசுகிசு மகிழ்ச்சிக்கு காரணம்,
கனிமொழியை ஜாமீனில் விட டில்லி சம்மதித்து விட்டது என்று பரவலாக அடிபடும் பேச்சுதான்.
சிறிது காலத்துக்கு முன்னர், “கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” என்று கருணாநிதிக்கு டில்லி அட்வைஸ் பண்ணியதாக ஒரு பேச்சு அடிபட்டிருந்தது. அவர்கள் கூறிய இரண்டு மாதங்கள் இப்போது முடிந்து விட்டதாம்!
கனிமொழிக்கு ஜாமீன் பெறுவதற்கு தி.மு.க. தலைமை ரொம்ப பெரிய அளவில் முயற்சிகள் செய்திருந்தும், பலன் கிடைத்திருக்கவில்லை.
முதலில் சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஜாமீன் கேட்டார்கள். அது கிடைக்கவில்லை. பின் வரிசையாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் மனுவுடன் போனார்கள். சகல இடங்களிலும், கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தில், ஜாமீன் மறுத்ததுடன் நின்று விடவில்லை. கனிமொழிக்கு ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வாக்கியமும் அவர்களது தீர்ப்பில் இருந்தது. “உங்கள் மீதான குற்றச்சாட்டை பதிவு செய்து முடித்த பிறகு, சி.பி.ஐ. தனி நீதிமன்றத்திடம் நீங்கள் ஜாமீன் கேட்கலாம்” என்பதே அந்த வாக்கியம்.
ஆனால், ஸ்பெக்ட்ரம் கேஸில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் நடைமுறை இழுத்துக் கொண்டு சென்றது.
ஒரு வழியாக தற்போது தொடங்கி நடந்து வருகிறது அந்த நடைமுறை. மொத்தமுள்ள 17 குற்றவாளிகளில் இதுவரை 13 பேரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சரத் 16வது குற்றவாளியாகவும், கனிமொழி 17வது குற்றவாளியாகவும் உள்ளனர்.
அடுத்த வாரத்தில் எப்படியும் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் வேலை தொடங்கிவிடும் என்கிறார்கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்தவர்கள். இந்தப் பதிவு செய்தல் அதிகபட்சம் 3 தினங்களுக்கு மேல் எடுக்காது. வேகமாகச் செய்யப்பட்டால், ஒரே தினத்தில்கூட முடிந்து போகலாம்.
இதற்குள் கருணாநிதி செய்த சில முயற்சிகளின் பலனாக, டில்லியின் கடைக்கண் பார்வை இவர்கள்மீது விழுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். முக்கியமாக, தி.மு.க. தரப்பு ‘ஏதோ காரணங்களுக்காக’ பிரணாப் முகர்ஜியை நம்புவதாகத் தெரிகின்றது.
“பிரணாப் கேட்டதை தலைவர் முடித்து கொடுத்திட்டாரு. பிரணாப்பும், எப்படியும் கனிமொழி விவகாரத்தை முடித்துக் கொடுத்துவிடுவார்” என்று மத்தியிலுள்ள தி.மு.க. இணை அமைச்சர் ஒருவர் அடித்துச் சொல்லி வருகிறார். அதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பதும் தெரியவில்லை. கலைஞர் எதை ‘முடித்துக் கொடுத்தார்’ என்பது பற்றிய தகவலும் இல்லை. ஒரு ஊகம்தான் உள்ளது.
எது எப்படியோ, அடுத்த வாரம் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் வேலை துடிந்து விட்டால், அதைத் தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி மனு செய்வார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கனிமொழி தாக்கல் செய்யும் ஜாமீன் மனுவைத்தான் முதல் மனுவாக பரிசீலிக்க வேண்டும் என்பது நீதிமன்ற நடைமுறை.
இதுவரை காலமும் கனிமொழி தரப்பிலிருந்து ஜாமீன் மனு செய்யப்பட்ட போதெல்லாம், அதைத் தீவிரமாக எதிர்த்து வந்தது சி.பி.ஐ. தரப்பு! இனியும் அவர்கள் கனிமொழி ஜாமீன் மனுவை எதிர்ப்பார்களா?
கலைஞருக்கு டில்லியிலிருந்து சிக்னல் வந்துவிட்டது. “குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதும், முதல் வேலையாக ஜாமீனுக்கு மனு செய்யச் சொல்லுங்கள். மிகுதியை பிரணாப் முகர்ஜி பார்த்துக் கொள்வார். ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கச் செய்வது அவரது பொறுப்பு” என்று கூறப்பட்டு விட்டது என்கிறார்கள் தி.மு.க.வில் சிலர் வாயெல்லாம் பல்லாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக