: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் இடைத்தேர்வு நேற்று துவங்கியது. சமச்சீர் கல்வி பிரச்னையால் பாடமே நடக்காத நிலையில், 10-ம் வகுப்பு வரை குறித்த காலத்தில் காலாண்டு தேர்வு நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்தப் பிரச்னையால் கடந்த 2 மாதமாக பள்ளிகளில் வகுப்புகள் நடக்கவில்லை. எந்த பாட திட்டம் என்பது தெரியாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 மற்றும் 6-ம் வகுப்புக்கு கடந்த ஆண்டே சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. இப்போதும் இந்த வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையாக வகுப்புகள் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் இடைத்தேர்வு நேற்று துவங்கியது. 6-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. வழக்கமாக அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 2-வது வாரத்தில் காலாண்டு தேர்வு நடத்தப்படும். அதற்கு முன்பாக பாதி பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். டிசம்பர் மாதத்துக்குள் முழு பாடமும் முடிக்கப்பட்டு அரையாண்டு தேர்வு நடத்தப்படும்.
தற்போது என்ன பாட திட்டம் என்பதே முடிவாகாததால் குறித்த காலத்தில் பாடங்களை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வாரத்துக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த பாட திட்டம் என்பது முடிவானாலும் பாட புத்தகங்களை வினியோகம் செய்வதற்கு சில நாட்கள் ஆகிவிடும். அதன் பிறகுதான் வகுப்புகள் துவக்கப்படும்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், 31-ல் ரம்ஜான், செப்டம்பர் 1-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்று அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகின்றன. இவை தவிர வார விடுமுறை நாட்களும் உள்ளன. காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்கள் இல்லை, வார விடுமுறை இல்லை என்று கூறி வகுப்புகளை நடத்தினால் மாணவர்கள் மீது பாடச்சுமை திணிக்கப்படும். இது மனரீதியாக அவர்களை மேலும் பாதிக்கும். இதனால் குறித்த காலத்துக்குள் பாடம் முடிக்கப்பட்டு 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்படுமா அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் காலாண்டு தேர்வு நடத்தப்படாமல் போக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக