தூத்துக்குடி: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணப்படி மீட்டரில் ரீடிங் எடுக்கப்பட்டு யூனிட் அளவுக்கு ஏற்ப மின் கட்டணம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.இருமாதங்களுக்கு ஒருமுறை மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு கட்டணம் செலுத்தும் முறை வழக்கத்தில் இருந்தது. இதன்படி மாதத்தின் முதல் தேதியில் இருந்து 15ம் தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தவேண்டும். மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின்இணைப்புகள் 16ம் தேதியில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். இதனால் பொதுமக்கள் 15ம் தேதிக்குள் மின்கட்டணத்தை செலுத்தவேண்டும் என்பதை நினைவில் வைத்து மின்கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மின்கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் மாதம் முழுவதும் மின்கட்டணம் ரீடிங் எடுக்கப்படும், அதேபோன்று மின்கட்டணத்தையும் மாதம் முழுவதும் செலுத்தலாம். ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் கிராமங்கள் முதல் நகரங்களில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று மின்அளவை கணக்கீடு செய்வதற்கு போதுமான பணியாளர்கள் மின்வாரியத்தில் இல்லை. இதனால் பல்வேறு இடங்களில் மின்அளவு தொடர்ச்சியாக கணக்கீடு செய்யப்படுவதில்லை. பல்வேறு இடங்களில் முந்தைய மாதத்திற்கான மின் கட்டணத்தையே பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். இதில் முந்தைய மாத அளவை காட்டிலும் மின்சாரம் குறைவாக செலவிடப் பட்டிருந்தாலும் பொதுமக்கள் கூடுதலாக மின்கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளது.
இந்நிலையில் மாதம் மாதம் எடுக்கப்படும் மின்கட்டண அளவுக்கான கட்டணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டவேண்டும் என்ற அறிவிப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மின் அளவை கணக்கெடுக்க ஊழியர்களே வராத நிலையில், தங்களது வீட்டுக்கு எந்த தேதியில் ரீடிங் எடுக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில் எந்த 20 நாட்களுக்குள் மின்கட்டணத்தை செலுத்தவேண்டும் என்பது புரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் அபராதத்தொகையுடன் மின்கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக