சேலம்: அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பீருக்கு ரூ.5, பிராந்தி வகைகளுக்கு ரூ.10 வரை உயர்த்தப்படும்
என தெரிகிறது.தமிழகத்தில் தனியார்வசம் இருந்த மதுபானக் கடைகளை, 2003-ம் ஆண்டு நவம்பர் முதல் அரசே ஏற்று நடத்தி வருகிறது. டாஸ்மாக் நிறுவனம் மூலம் 6 ஆயிரத்து 500 மதுக் கடைகள் திறக்கப்பட்டன. கடை, பார் சூபர்வைசர்கள், விற்பனையாளர், பார் உதவியாளர்கள் என 36 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது.ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் 7560 டாஸ்மாக் கடைகள் இருந்தன. கோயில்கள், பள்ளிகள் அருகில் இருந்த கடைகளும், விற்பனை குறைவாக நடந்த கடைகளும் படிப்படியாக மூடப்பட்டன. தற்போது 6500 கடைகள் உள்ளன. பீர், பிராந்தி, ரம், விஸ்கி, ஸ்காட்ச் என 700க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அரசுக்கு வருவாய் ஈட்டித்தருவதில் கலால் துறைதான் முதலிடத்தில் உள்ளது. டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. மது விற்பனையை அதிகரிக்க, குளிர்சாதன வசதிகளுடன் கூடிய Ôஎலைட்Õ மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பீர் வகைகளுக்கு ரூ.5, பிராந்தி வகைகளுக்கு ரூ.10 வரை விலையை உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபரில் அனைத்து வகை மதுபானங்களும் ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டது. சில்லரை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, மதுபான விலை Ôரவுண்ட்-அப்Õ செய்யப்பட்டது. விலை உயர்த்தி இரண்டு ஆண்டுகள்கூட ஆகாத நிலையில் மீண்டும் மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பது Ôகுடிமகன்Õகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து, டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மதுபானங்களை உற்பத்தி செய்ய தேவைப்படும் மொலாசஸ், சர்க்கரை போன்ற முக்கிய மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு மற்றும் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. அதனால் மதுபான நிறுவனங்கள் கூடுதல் கமிஷன் கேட்கின்றன. மேலும் தமிழக அரசும் இலவச ஆடுகள், கறவை மாடு, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட இலவச திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதற்காக டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதனால் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக