சென்னை: பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவனை ராணுவம் சுட்டதால்தான் அவன் இறந்தான் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது
. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருகில் ராணுவ மையம் உள்ளது. ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் பாதாம், மா உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த வளாகத்தின் அருகே உள்ள இந்திரா நகர் குடிசைப்பகுதியில் வசிப்பவர் குமார்.
இவரது மகன் தில்சன் (13), நேற்று மதியம் நண்பர்கள் சஞ்சய், பிரவீன் ஆகியோருடன் பாதாம் கொட்டைகளை சேகரிப்பதற்காக ராணுவ குடியிருப்புக்கு சென்றான். மூவரும் தடுப்பு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். அங்கு நவீன ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர், திடீரென சிறுவர்களை நோக்கி சுட்டார். தில்சனின் நெற்றியில் பாய்ந்த குண்டு, மண்டையை துளைத்துக் கொண்டு வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் சிறுவன் துடிதுடித்து சாய்ந்தான். சிறுவனை சுட்ட வீரரோ, எதுவும் நடக்காததுபோல அலட்சியமாக நின்று கொண்டிருந்தார்.
மற்ற சிறுவர்கள் இருவரும் அலறியடித்து ஓடி, தில்சனின் அம்மாவிடம் விஷயத்தை கூறினர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தவிர்க்க, போலீசார் குவிக்கப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை போலீசார்தான் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாலையில் அவன் இறந்தான்.இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது போலீசார் மீது சிலர் கற்களை வீசினர். இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. தடியடி சம்பவத்தால், அந்தப் பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது.
பூக்கடை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுவனை அடையாளம் தெரியாத ராணுவ வீரர் சுட்டதாக எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து டிஐஜி ஸ்ரீதர், எஸ்பி சோனல் மிஸ்ரா ஆகியோர் உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் இறக்கவில்லை என ராணுவ பிரிகேடியர் சசி நாயர் கூறினார். ‘‘ராணுவ வளாகத்தில் யாரும் ஆயுதங்களை பயன்படுத்துவது கிடையாது. லத்தியுடன் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதனால், துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
மரத்தில் இருந்து தவறி விழுந்து கம்பி குத்தி இறந்திருக்கலாம்’’ என அவர் தெரிவித்திருந்தார். ஆனால், துப்பாக்கி குண்டு பாய்ந்துதான் சிறுவன் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. சிறுவனின் உடல் நேற்று மாலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘சிறுவன் மீது குண்டு பாய்ந்ததால்தான் இறக்க நேரிட்டது’ என கூறப்பட்டுள்ளது. வீரர் யாரும் சுடவில்லை என்று ராணுவ அதிகாரி மறுத்த நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்துதான் சிறுவன் இறந்தான் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் ராணுவத்தினருக்கும் தமிழக போலீசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இந்த கொடூர செயல் செய்த ராணுவ வீரரை உடனடியாக தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், ராணுவ வீரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். சிபிசிஐடி போலீஸ் விசாரணையைத் தொடர்ந்து, சிறுவனை சுட்ட ராணுவ வீரர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
சிறுவனின் உடல் அடக்கம்!
சிறுவன் தில்சன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. காலை 10 மணிக்கு மூலக்கொத்தளம் மயானத்தில் உடல் அடக்கம் நடந்தது. தந்தை குமார் இறுதி சடங்குகள் செய்தார். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீஸ் இணை கமிஷனர் தாமரைக் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக