சென்னை: தோல்வியை கண்டு துவளாத இயக்கம் திமுக. பீனிக்ஸ் பறவையாக எழுந்து மீண்டும் வருவோம் என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். மயிலை பகுதி திமுக சார்பில் மாங்கொல்லையில் நேற்று மாலை பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தோல்வியை கண்டு துவளாத இயக்கம் நம்முடையது. அதனால்தான் இங்கே இத்தனை பெரிய கூட்டம் திரண்டிருக்கிறது. சூரியன் அஸ்தமித்துவிட்டது என்கிறார் ஜெயலலிதா. சூரியன் என்றுமே அஸ்தமிப்பது இல்லை.
மாற்றம் தேவை என்றார்கள். என்னென்ன மாற்றம் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏமாற்றம். சமச்சீர் கல்வி இந்த சமுதாயத்தை மேம்படுத்தும் திட்டம். அதை கொண்டு வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்பதால் தடுக்கிறது அரசு. மருத்துவ காப்பீடு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவையும் அதே காரணத்தால் முடக்கப்படுகிறது.
தலைமை செயலகத்தை மாற்ற முதலில் முடிவெடுத்ததே ஜெயலலிதாதான். கடற்கரை சாலை, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் தலைமை செயலகம் கட்ட முயன்றார். நூறாண்டு பழமையான கல்லூரியை இடிக்க கூடாது என்று போராடிய மாணவிகளுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்ததால் எங்கள் மீது வழக்கு போட்டனர். திமுக ஆட்சி வந்ததும் அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டினார் கருணாநிதி. அதற்கு விசாரணை கமிஷனாம். நாங்கள் பார்க்காத விசாரணை கமிஷனா?
உங்களை போல வாய்தா வாங்கி ஓடி ஒளிய மாட்டோம். மானம், வெட்கம், சூடு, சொரணை இருப்பதால் வாய்தா வாங்காமல் வழக்கை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள்..? எதையுமே முறையாக செய்ய தெரியவில்லையே உங்களுக்கு. நீங்களே தேர்வு செய்யும் அமைச்சர்களின் நிலையே இன்று மந்திரி... நாளை எந்திரி என்ற பரிதாப நிலையில் அல்லவா இருக்கிறது. பழிவாங்கும் செயலை ஜெயலலிதா தொடங்கி இருக்கிறார். ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். தடுக்க மாட்டோம்.
ஆனால், பொய் வழக்கு அல்லவா போடுகிறார். ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வெடுக்கும் சொகுசு பங்களா கோடநாட்டில் உள்ளது. சுற்றியுள்ள மக்கள் செல்வதற்கான சாலை மூடப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திறந்து விடவில்லை. திறந்தே ஆக வேண்டும் என்று இன்று (நேற்று) மீண்டும் உத்தரவு வந்திருக்கிறது. சட்டத்துக்கும் நீதிக்கும் அவர் தரும் மரியாதை இதுதான். அதேபோல, சிறுதாவூரில் திமுக ஆட்சியில் தலித் குடும்பங்களுக்கு வழங்கிய நிலம் கைமாறி இன்று சொகுசு பங்களா கட்டப்பட்டுள்ளது.
அந்த பங்களா இப்போது ரிசார்ட்டாக மாறி உள்ளது. அதன் இயக்குனர்கள் வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி. நில ஆக்கிரமிப்பு என்று திமுகவினர் மீது பொய் வழக்கு போடும் ஜெயலலிதா, யோக்கியமானவராக இருந்தால் சிறுதாவூர் இடத்தை தலித் மக்களுக்கு தந்துவிட்டு வழக்கு போடட்டும். தோல்விகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு, பீனிக்ஸ் பறவை போல் எழுந்து ஆட்சிக்கு வரும் இயக்கம் இது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தென்சென்னை திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் (எம்எல்ஏ): அதிமுக ஆட்சியில் செயின் பறிப்பு இருக்காது, செயின் பறிப்பவர்கள் வெளிமாநிலத்துக்கு சென்று விட்டார்கள் என்றார். அப்படியானால் இப்போது செயின் பறிப்பவர்கள் யார்? வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும். சட்டசபையில் எங்களை ஒன்றாக அமர வைக்க பயந்து, தனித்தனியாக உட்கார வைக்கிறார்கள். பட்ஜெட் தொடரிலும் எங்களை ஒன்றாக அமர வைக்காவிட்டால் சாலையில் சட்டசபை கூட்டத்தை நடத்துவோம்.
மேயர் மா.சுப்பிரமணியன்: திமுகவை ஏன் புறக்கணித்தோம் என்று மக்கள் இப்போது உணருகிறார்கள். திமுக அரசின் நல்ல திட்டங்களை ஜெயலலிதா நிறுத்திவிட்டார். கூட்டத்துக்கு மயிலை த.வேலு தலைமை தாங்கினார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வி.எஸ்.ராஜூ உள்பட பலர் பேசினர். சுகவனம் எம்.பி., சைதை பகுதி செயலாளர் மகேஷ்குமார், வி.எஸ்.பாபு, ஆயிரம்விளக்கு உசேன், கு.க.செல்வம் உள்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக