திருவனந்தபுரம்: ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலில் நகைகள் கணக்கெடுப்பு மீண்டும் இன்று துவங்கியது. தங்கப் புதையலை பாதுகாக்க, கோயிலை சுற்றி 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சுற்றும் மொபைல் பேட்ரோலிங் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் நகைகள் கணக்கெடுப்பு துவங்கிய நிலையில் இதுவரை கோயிலில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள பாதாள அறைகளில் திறக்க, திறக்க தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மதிப்புமிக்க இந்த சொத்துக்களை கோயிலில் வைத்தே தொடர்ந்து பாதுகாக்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நடந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நகைகளை பாதுகாக்க வசதியாக தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் கோயிலில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. திருவனந்தபுரம் போர்ட் காவல்நிலையத்தில் இதற்காக சிறப்பு கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கட்டுப்பாட்டறை செயல்பட துவங்குகிறது. 24 மணி நேரமும் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் மொபைல் பேட்ரோலிங் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். பக்தர்களின் நம்பிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் கோயில் நகைகள் பாதுகாப்பு விஷயம் தொடர்பாக மன்னர் குடும்பம், கோயில் தந்திரி ஆகியோரோடு ஆலோசனை நடத்திய பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார். கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் அரசுக்கு உண்டு என்றும், இதற்கான எல்லா செலவுகளையும் அரசே மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கோயிலில் பாதாள அறைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் விபரங்கள் இன்று மீண்டும் கணக்கெடுக்கப்படும். தினசரி பூஜைகளுக்கான பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ‘இ’ என்ற பாதாள அறை இன்று மதியம் 1 மணிக்கு பின்னர் திறக்கப்படும். இந்த அறை, கோயில் பெரிய நம்பியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் உள்ள பொருட்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அது பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இன்று பிரபாத பூஜைக்கும், உச்சபூஜைக்கும் இடைவேளையில் இந்த அறையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இது தொடர்பான அனைத்து விபரங்களுடன் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நகை கணக்கெடுப்பு குழுவினர் டெல்லி செல்கின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்துதான் ‘பி’ என்று பெயரிடப்பட்டுள்ள அறை திறக்கப்படும். ஒன்றரை நூற்றாண்டுகள் திறக்கப்படவில்லை என்று கருதப்படுகின்ற இந்த அறையில் பெருமளவு தங்க, வைர, வைடூரிய நகைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரூ.1 லட்சம் கோடி பொக்கிஷங்கள் திருவனந்தபுரம் பத்மனாப சாமி கோயிலில் பாதாள அறைகளில் இருந்து இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் தங்கம், வைரம், ரத்தினம் அடங்கிய நகைகள், தங்க நாணயங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றில் விவரம் தெரிந்த சில நகைகளின் பட்டியல்: 1. சுமார் ஆயிரம் கிலோ தங்க நாணயங்கள் (நெப்போலியன் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி காலத்தை சேர்ந்த இந்த நாணயங்கள் சந்தன கட்டைகள், யானை தந்தம் மற்றும் மிளகு, ஏலக்காய் போன்ற வாசனை திரவியங்களின் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டவை எனக் கூறப்படுகிறது) 2. 1 டன் தங்கம் - இதில் சாக்கு நிறைய தங்க நெல்மணிகள், மாலைகள், நகைகள், 30 கிலோ எடையுள்ள தங்க அங்கி, ரூபி மற்றும் எமரால்டு கற்கள் பதிக்கப்பட்ட தங்க தேங்காய்கள், 35 கிலோ எடையுள்ள 18 அடி நீள தங்க மாலை, 1 கிலோ எடையும் 1 அடி உயரமும் கொண்ட தங்க சிலைகள், கார்த்திகை திருநாள் ராமவர்ம மகாராஜ காலமான 1772ம் ஆண்டைச் சேர்ந்த தங்க நாணயங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. 3. சாக்குப்பை நிறைய வைரம். இவை இலங்கை மற்றும் மியான்மர் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. 4. 3.5 அடி உயரம் கொண்ட தங்கத்தாலான மகாவிஷ்ணு திருவுருவச்சிலை. இதில் விலை உயர்ந்த வைரம், எமரால்டு, ரூபி போன்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. For more NEWS updates, follow us on Twitter or join us on Facebookமின்னஞ்சல் | 0 0 0 New மேலும் சில
|
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் தங்கப் புதையலை பாதுகாக்க 24 மணி நேர ரோந்து!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக