மதுரை: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் ‘பார்’களில் ஜெயலலிதா படத்துடன் தண்ணீர் பாக்கெட் விற்கப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை மற்றும் நெல்லை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள ‘பார்’களுக்கான உரிமம் நேற்றுடன் முடிந்தது. புதிய உரிமம்
வழங்குவதற்கான ஏலம், கடந்த 3 நாட்களாக நடந்தது. சில இடங்களில் பார் ஏலம் எடுப்பதில் அதிமுக, தேமுதிகவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஆளும்கட்சியினருக்கு மட்டுமே டெண்டர் படிவம் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
புதிதாக உரிமம் பெற்றவர்கள், இன்று முதல் ‘பார்’களை நடத்த வேண்டும். ஆனால், பல இடங்களில் இட பிரச்னையால் பார் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடம் கிடைக்காததால் சிலருக்கு உரிமம் கிடைக்கவில்லை. இதனால் மதுரை மாவட்டத்தில் 90 பார்கள், நெல்லையில் 50-க்கும் அதிகமான பார்கள் இன்று மூடப்பட்டன. பார் இல்லாவிட்டால் மது விற்பனை பாதிக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் பார்களில் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் தண்ணீர் பாக்கெட்கள் விற்கப்பட்டது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாக்கெட்டின் ஒரு பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா படமும் ‘சிவகங்கை மாவட்ட கழகம் அம்மா’ என பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு சிலர் புகார் அனுப்பி உள்ளனர். கட்சித் தலைமை மீதுள்ள விசுவாசத்தால் இப்படி செய்தார்களா அல்லது கட்சி நிர்வாகிகள் யாரையாவது பழிவாங்கும் நடவடிக்கையில் செய்தார்களா என மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக