6.45க்கு முதல் குண்டுவெடித்தது
மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.
மாலை 6.45 மணியளவில் முதல் குண்டுவெடித்தது. ஜவேரி பஜார் பகுதியில், கவ் காலி என்ற இடத்தில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் இருந்த மீட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது.
அடுத்து ஓபரா ஹவுஸில் உள்ள பிரஷாந்த் சேம்பரில் நின்றிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் 3வது குண்டுவெடித்தது. இது சக்தி வாய்ந்த குண்டாகும்.
கடைசியாக 7.04 மணிக்கு தாதர் மேற்குப் பகுதியில், கபூதர்கானா என்ற இடத்தில் நின்றிருந்த ஒரு மாருதி எஸ்டீம் காரில் இந்த குண்டு வெடித்தது.
ஓபரா ஹவுஸில் வெடித்தது சக்தி வாய்ந்தது
மூன்று சம்பவங்களிலும் ஓபரா ஹவுஸில் வெடித்த குண்டுதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இங்குதான் உயிர்ச்சேதமும் அதிகம் ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று சம்பவங்களிலும் 10 பேர் பலியானதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். குண்டுவெடிப்புகளில் 54 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் சற்று முன்னர் பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 20 பேர் இறந்துள்ளதாகவும், 81 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறினார்.
மும்பை முழுவதும் உஷார் நிலை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப் புற சாலைகளில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.
4வது முறை குறி வைக்கப்பட்ட ஜவேரி பஜார்:
இன்று குண்டு வெடிப்பு நடந்த ஜவேரி பஜார் பகுதியில் 1999, 2003 மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தொடர் குண்டு வெடிப்பின்போதும் குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 4வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று நடந்த குண்டு வெடிப்புகளில் ஓபரா ஹவுசில் நடந்தது தான் மிகப் பெரிய தாக்குதலாகும். அங்கு தான் மிக அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.
தயார் நிலையில் என்எஸ்ஜி கமாண்டோக்கள்
என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதிரடி நடவடிக்கைக்குத் தேவையான அளவில் அவர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
என்ஐஏ குழு மும்பை விரைகிறது
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் புலனாய்வுக் குழு டெல்லியிலிருந்து மும்பை விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாத தாக்குதல்-உள்துறை அமைச்சகம்
மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், மத்திய உள்துறை செயலாளர் யு.கே.பன்சால், மகாராஷ்டிர மாநில டிஜிபியைத் தொடர்பு கொண்டு பேசினார்.
இதையடுத்து இந்த சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் மூலம் என்எஸ்ஜி கமாண்டோப் படையினரும், தடயவியல் நிபுணர்களும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
நாடு முழுவதும் உஷார் நிலை
மேலும், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக