சென்னை, ஜூலை 13: போலியாக சித்தரிக்கப்பட்ட காட்சியை ஒளிபரப்பி தனது வாழ்க்கையை சீர்குலைத்த சன் டிவி, தினகரன் உள்ளிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை ரஞ்சிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் நடிகை ரஞ்சிதா செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சியைக் கற்பனை கலந்து ஒளிபரப்பி எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் சீர்குலைத்துவிட்டனர். இந்தக் காட்சியையும், தவறான செய்தியையும் வெளியிட்ட டிவி, பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியான மிரட்டல்கள்: சன் டிவி குழுமத்தின் மீது தொடர்ச்சியான புகார்கள் வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நானும் புகார் கொடுத்து ஆதாயம் தேடவில்லை. இத்தனை காலம் எனக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் நான் புகார் ஏதும் கொடுக்கவில்லை.அந்த காலகட்டத்தில், சென்னைக்கு வந்து நான் யார் மீது புகார் கொடுத்தாலும், என் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சிலரிடமிருந்து மிரட்டல்கள் வந்தன. போலி காட்சிகளை ஒளிபரப்பாமல் நிறுத்த வேண்டுமானால் குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும் எனவும் சிலர் மிரட்டினார்கள். அவர்களின் பட்டியலை நான் காவல்துறையிடம் கொடுத்திருக்கிறேன்.புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசின் மீது உள்ள நம்பிக்கையாலேயே இப்போது புகார் அளித்துள்ளேன். தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரஞ்சிதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக