மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவும், அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்துவிடப்படும்.
இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் தொடர்ந்து நீடிப்பதால் தமிழக விவசாயிகள் ஜூன் 12-ந் தேதிக்கு முன்னரே பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (6-ந் தேதி) காலை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து விட உத்தரவிட்டார். இதன்படி இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி ஆகியோர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை விட்டனர்.
முன்னதாக அணையின் மேல்மட்ட மதகு வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் மேல்மட்ட மதகு வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டது.
இவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப் பட்டு மாலை 4 மணிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும். இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களின் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இன்று காலை திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை சென்றடைய 3 நாட்கள் ஆகும். 8-ந் தேதி தண்ணீர் கல்லணையை சென்றடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக தேங்காய், பழம் வைத்து காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பின் மலர்தூவி காவிரி அன்னையை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சேலம் கலெக்டர் மகரபூஷனம் முன்னிலை வகித்தார்.விழாவில் மேட்டூர் தொகுதி தே.மு. தி.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பார்த்தீபன், பொதுப்பணித் துறையின் சேலம் வட்ட கண்காணிப்பு என்ஜினீயர் கணேசமரச்சண், மேட்டூர் நிர்வாக என்ஜினீயர் சந்திர சேகர், உதவி நிர்வாக என்ஜினீயர் குமாரசாமி, அணை பிரிவு உதவி பொறியாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படுவதால் 110 மெகா வாட் மின்சாரமும் காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப் பேட்டை, கோனேரிப் பட்டி, குதிரைகல் மேடு, பவானி கட்டளை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கீழ்கதவணை மின் திட்டம் (பேரேஜ்) மூலம் 150 மெகாவாட் மின்சாரமும் மொத்தம் 260 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் பொழுது அணையின் நீர் இருப்பு நன்றாக இருந்தால் ஜூன் 12-ந் தேதிக்கு முன்பே தண்ணீர் திறக்கப்படும். கடந்த 62 ஆண்டுகளாக ஜூன் 12-ந் தேதிக்கு முன்பே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை.
அதாவது கடந்த 1947-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனை அடுத்து 62 ஆண்டுகளுக்கு பின் இன்று தான் ஜூன் 12-ந் தேதிக்கு முன்பு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை நன்றாக இருக்கும் என்பதால் விவசாயிகள், பொதுப்பணித்துறையினரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக