பெ.நா.பாளையம்: கோவை துடியலூர் புதுமுத்து நகர் பகுதியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு வசிப்போர், திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி கோவை வந்தனர். இங்கு 50 குடும்பங்கள் உள்ளன. ஆண்கள் தள்ளுவண்டிகளிலும், பெண்கள் கூடைகளிலும் ஊசி, பாசி மற்றும் அலங்கார பொருட்களை விற்கச் செல்கின்றனர். அதிகாலை 5 மணிக்கு துடியலூரில் இருந்து பஸ்சில் புறப்படும் பெண்கள் மாலை 4 மணிக்கு வீடு திரும்புகின்றனர். இவர்களின் குழந்தைகளில் பலர் வெள்ளக்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சிலர் அருகில் உள்ள தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.
இவர்கள் வசிப்பது குடிசை என்றாலும், வாழ்க்கை முறை பெரிதும் மாறிவிட்டது. இங்கு வசிக்கும் நரிக்குறவர் நலவாரியத்தின் கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டத்தின் பொதுச்செயலாளர் பழனி கூறியதாவது: கோவையில் வசிக்கும் எங்களுக்குத்தான் முதல்முறையாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இங்கு பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் இல்லை. எனது தம்பி திருமலை, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.பி.எம் படிக்கிறார். எங்கள் சமூகத்தை சேர்ந்த அனைத்து குழந்தைகளும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
முன்பு போல் ஆண்கள் யாரும் வேட்டையாடவோ, முயல், காடை, கவுதாரி பிடிக்கவோ செல்வதில்லை. தள்ளுவண்டிகளில் ஊசி பாசி விற்கிறோம். நாளொன்றுக்கு ரூ.300 சம்பாதிக்கிறோம். செலவு போக ரூ.100 மிச்சப்படுத்துகிறோம். கல்விதான் வாழ்க்கையை மாற்றும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம். நாங்கள் கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். முன்பு போல அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லை. வயதுக்கு வந்தவுடன் சிறுமிகளுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பதில்லை. மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். இவ்வாறு பழனி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக