டெல்லி: பாஜக மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி இடையே இதுவரை நடந்து வந்த பனிப் போர் வெளிப்படையாக வெடித்துள்ளது.
கர்நாடக அரசியலில் முதல்வர் எதியூரப்பாவுக்கு பெரும் தலைவலியாக உள்ள ரெட்டி சகோதரர்களை சுஷ்மா சுவராஜ் தான் வளர்த்து வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டது கர்நாடக மாநிலம் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் தான்.அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார் சுஷ்மா சுவராஜ். அப்போது அவருக்கு ரெட்டி சகோதரர்கள் நெருக்கமாயினர். இதையடுத்து சுஷ்மா இருக்கும் தைரியத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக பல்வேறு சிக்கல்களை இந்த சகோதரர்கள் உருவாக்கி வந்தனர்.
இப்போது கர்நாடக பாஜக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு அருண் ஜேட்லி வசம் வந்துவிட்டது. இதனால் சுஷ்மா-ஜேட்லி இடையே பிரச்சனை வெடித்துள்ளது.
சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், ரெட்டி சகோதரர்களை நான் தான் ஆதரித்து வருவதாக பொய்யான பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜேட்லி மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார் சுஷ்மா.
எதியூரப்பா அமைச்சரவையில் உள்ள இரு ரெட்டி சகோதரர்களையும், அவர்களது ஆதரவாளரான ஸ்ரீராமுலுவையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் கூட எனக்குக் கவலையில்லை. அதை நான் எதி்ர்க்கவும் மாட்டேன் என்றார் சுஷ்மா.
இதைத் தொடர்ந்து சில தொலைக் காட்சிகளுக்கும் அவுட்லுக் வார இதழுக்கும் சுஷ்மா அளித்துள்ள பேட்டியில், பெல்லாரி ரெட்டி சகோதரர்களை கர்நாடக பாஜக விவகாரங்களை கவனிக்கும் அருண் ஜெட்லி தான் வளர்த்துவிட்டு வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை அமைச்சரவையில் சேர்க்க நான் ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தேன். ஆனால், அரசியல் காரணங்களைக் கூறி அவர்களை அமைச்சரவையில் சேர்த்தனர். அப்போது கர்நாடக விவகாரங்களை கவனித்து வந்தது ஜேட்லி தான்.
ஜேட்லி, எதியூரப்பா, வெங்கையா நாயுடு, அனந்த்குமார் ஆகிய மூத்த தலைவர்கள் தான் அந்த முடிவை எடுத்தனர். 3 ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்று கூறியும் அதை மீறி அவர்களை சேர்த்தனர். அவர்களுக்கு என்ன அரசியல் நெருக்கடி இருந்ததோ தெரியவில்லை என்று கூறியுள்ளார் சுஷ்மா.
கர்நாடக பாஜக கட்சிக்கு ரெட்டி சகோதரர்கள் ரூ. 160 கோடி தந்ததைத் தான் அவர் அரசியல் நெருக்கடி என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது. பாஜக கூட்டத்திலும் சுஷ்மா இந்தப் பிரச்சனையை எழுப்பியுள்ளார். ரெட்டி சகோதரர்களிடம் இவ்வளவு பணத்தை வாங்கினால் அதற்கான விலையை நாம் தந்து தானே ஆக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று சுஷ்மா கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரங்க ஊழல் விவகாரத்தில் பெயர் கெட்டுப் போன ரெட்டி சகோதரர்களுக்கு சுஷ்மா தான்
தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார் என்று அவ்வப்போது மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருவதற்கு ஜேட்லி தான் காரணம் என்று சுஷ்மா காரணமாகத் தெரிகிறது. பாஜகவின் உயர் மட்டத் தலைவர் பதவிக்கு தான் போட்டியாக உள்ளதால், தனது பெயரை ஜேட்லி கெடுக்க முயல்வதாக சுஷ்மா கருதுவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்த்தது எனது சொந்த முடிவு என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா விளக்கமளித்துள்ளார். இதில் சுஷ்மாவோ அல்லது வேறு யாருமோ தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக