ஆப்கானிஸ்தான் பெண் ஒருவருக்கு பொது மக்கள் முன்னிலையில் தலிபான்கள் கொடூர தண்டனை அளித்துள்ளது, அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்கீனமற்ற பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக தலிபான்களால் குற்றம் சுமத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் 9 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தங்கள் கட்டுபாட்டை மீறி நடப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் செயற்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் பெண்களின் மனித உரிமை விவகாரத்தில் சமூக அமைப்புக்களும் பிற நாடுகளும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாணத்தில், சுமார் 150 பேர் முன்னிலையில் குறித்த இளம்பெண் இவ்வாறு சுடப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ கட்டளை தளபதி ஜோன் அலென், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தலிபான்களின் இச்செயலுக்கு தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். எனினும் இச்செயலை தாம் செய்யவில்லை என தலிபான்கள் மறுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் அபிவிருத்திக்கு சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சுமார் 70 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச நிறுவனங்கள் முன்வந்த நிலையில் இவ்வாறான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பெரும் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக