சீனாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நான்கு மாகாணங்களில், கடந்த சில நாட்களாக திடீரென பெய்த பெருமழையில் சிக்கி, 50 பேர் பலியாகினர்; ஒரு இலட்சத்து 27 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சீனாவின் பெரிய நதியான யாங்த்ஸி ஆறு ஓடும் ஹூபேய், ஹ_னான், ஜியாங்க்சி மற்றும் குயிஷாவூ ஆகிய நான்கு மாகாணங்கள் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த நான்கு மாகாணங்களிலும் திடீரென பெருமழை பெய்து வருகிறது. ஹ_பேய் மாகாணத்தில் மழையில் சிக்கி 25 பேர் பலியாகினர்; 12 பேர் காணமல் போயுள்ளனர்.
வெள்ள நீர் சூழ்ந்ததால், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இம்மாகாணத்தில் மட்டும் மழையால், 600 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இம்மாகாணத்தின் ஷியான்னிங் நகரின் டாங்செங் பகுதியில், கடந்த 200 ஆண்டு களுக்குப் பின், நேற்று நான்கு மணி நேரத்தில் 300 மி.மீ., அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. நகரின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கின. போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப் பட்டன. ஹூனான் மாகாணத்தில் மழைக்கு 19 பேர் பலியாகினர்; 28 பேர் மாயமாயினர்.
இரு நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஜியாங்க்சி மாகாணத்தின் ஷின்சூயி பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 1,200 பேர் மீட்கப்பட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த 29 ஆயிரத்து 500 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இப்பகுதியில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர்.
குயிஷாவூ மாகாணத்திலும் மழைக்கு மூன்று பேர் பலியாகினர். மொத்தம் 50 பேர் வரை மழைக்கு பலியாகியிருக்கக் கூடும் அல்லது காணாமல் போயிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக