சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 15-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. எந்த பாடப் புத்தகங்களை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்த கடந்த 2006ம் ஆண்டு முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு உருவாக்கியது. அந்தக் குழு மாவட்ட வாரியாக சென்று பள்ளிக் கல்வியில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. அதன் பிறகு 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள நான்கு விதமாக பாடத்திட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான சிறந்த தரமுடைய பாடத்திட்டத்தை கொண்டு வர அரசு முடிவு செய்தது. இதற்காக சட்ட முன்வடிவு கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. முதல்கட்டமாக 2010-ம் ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 10 இணை இயக்குநர்கள் தலைமையில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி நடந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் புத்தகம் அச்சிடும் பணி தொடங்கியது. 7.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டது. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், அதிமுக அரசு பதவி ஏற்றதும் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதை சுயநிதி பள்ளிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றன. இந்த திடீர் அறிவிப்பால் பள்ளி மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பெற்றோரும் கவலை அடைந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஏற்கனவே, சமச்சீர் கல்வி பாடங்களை படிக்கத் தொடங்கிவிட்டனர். திடீரென சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதால் அவர்கள் குழப்பமடைந்தனர்.
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமில்லை என்றும், தரமான பாடங்கள் இடம் பெற்ற பிறகு சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வரும் என்றும் அரசு தெரிவித்தது. தனியாக ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்ததுடன், ரூ.200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட 7.5 கோடி சமச்சீர் கல்வி புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. பழைய பாடப் புத்தகங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவித்தது. பழைய புத்தகங்களை அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்நிலையில், 4 கோடி அளவில் பழைய புத்தகங்களை மீண்டும் அச்சடிக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் டெண்டர் விட்டு, தற்போது பழைய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் புத்தகங்கள் அச்சிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சமச்சீர் கல்வித் திருத்த சட்ட மசோதாவும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே சமச்சீர் கல்வியை ரத்து செய்யக் கூடாது என்று ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோன்மணியம் உள்பட பலர் கடந்த மே மாதம் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சமச்சீர் கல்வி திருத்த சட்டம் பிரிவு 3-க்கு வழக்கு முடியும் வரை தடை விதிக்கப்பட்டது. ஐகோர்ட் தீர்ப்பையடுத்து மாணவர்களிடையே மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. பள்ளிகள் குறித்த காலத்தில் திறக்கப்படுமா, எந்த பாடப்புத்தகத்தை பின்பற்றுவது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர். ஆனால், ஏற்கனவே அறிவித்தபடி 15-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா கூறியதாவது:
கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 15-ம் தேதிக்கு திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை. 15-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். எந்த பாடப் புத்தகத்தை பின்பற்றுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக