அப்போது தான் நான் பிறந்திருந்தேன் என்னை என் அப்பாவிடம் ஒப்படைக்கின்றனர். என் அப்பாவின்; கைகளின் ஸ்பரிசம் பட்டவுடன் இறைவனை தொட்ட உணர்வு எனக்குள்ளே...
என்னை வாஞ்சையுடன் அணைத்த என் அப்பாவின் கண்;களில் இருந்து என் கைகளிலே விழுந்த ஆனந்தக்கண்ணீர் இப்போதும் என் கைகளை நனைக்கின்றது...
சுமார் ஒரு மாதம். என் உடல் சூழல் தட்ப வெப்பங்களை மறுதலித்தபோதெல்லாம் அதற்கான ஒத்த தன்மைகளை வருடிதந்துகொண்டிருந்தார் என் அப்பா...
ஏழு மாதங்கள், நான் மெல்ல மெல்ல தவண்டு செல்ல ஆரம்பிக்கின்றேன். என் கால்கள் கொஞ்சம் வலிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒடிவந்து அள்ளி அணைத்து என் கால்களை தடவிக்கொடுக்கும் என் அப்பாவின் கருணையை உணர்கின்றேன் மெல்ல...
இதோ ஒரு வயதை எட்டிவிட்டேன். ஆவலுடன் நடக்க விளைகின்றேன். நான் விழுவேன் என்றும் எனக்கு தெரிகின்றது. ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் விழும்போது இதயம் நொந்து கண்கலங்கி என்னை தூக்கி உச்சிமுகரும் என் அப்பா எனக்கு மலைப்பாக இருக்கின்றார்.
சில வேளைகளில் எனக்கு உடல் இயலாமை தெரிகின்றது. நோ நிமித்தம் அழுகின்றேன். எனக்கு நோ என்றால் என் அப்பா படும் அவலத்தையும், அவரது கண்களில் கண்ணீரையும் கண்டு எத்தனை தரம் பிரமித்திருக்கின்றேன்.
எனக்கு நான்கு வயது எனது அப்பா எவ்வளவு இனிமையானவர்...
இப்போ ஐந்து வயது எனது அப்பாவுக்கு தெரியாத விடயம் ஒதுவும் இல்லை..
என் அப்பா பெரீரீரீய... ஆள்.
எனக்கு வயது ஆறு: எனக்கு எல்லாவற்றையும் உணர முடிகின்றது...
என் அப்பாவைப்போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம்தான் அப்பா.
இப்போ வயது 8 எனக்கு ஒரு பொருள் வாங்கித்தருவதற்காக பணம் வைத்திருந்த அப்பா..
ஒருவர் அவசர உதவி நாடி வந்ததும் அதை கொடுத்த விட்டார். முதலில் கோபம் வந்தாலும், பிறகு பெருமையாக இருந்தது.
வயது 12. நான் பெண் என்பது முழுமையாக உணர்கின்றேன். அப்பாவின் பாதுகாப்பு முழுமையாக எனக்கு தேவை என்று எண்ணுகின்றேன்.
வயது 14. நான் வளர்ந்துவிட்டேன் இன்னும் என்னை குழந்தையாக நினைத்து ஒரு விடையத்தை திரும்ப திரும்ப விளங்கப்படுத்தி அறுக்கிராரே அப்பா...
இப்போ எனக்கு வயது 16 என் தனிப்பட்ட சில விருப்பு வெறுப்புகளில் தேவையின்றி தலையிடுகிறாரே இந்த அப்பா. அவரது காலம் வேறு என் காலம் வேறு புரியவில்லை இந்த அப்பாவுக்கு..
இப்போதெல்லாம் அப்பாவை நினைத்தாலே அவர் இராணுவ உடையில் இருப்பதாகத்தான் மனதில் விம்பம்.
வயது 18 முதன் முறையாக அப்பாவுடன் முரண்பட்டுக்கொள்கின்றேன். பிரமிப்பாக என்னை அப்பா பார்த்ததும், அதன் பின் பேசாமல் இருந்ததும் எனக்கு அழுகையாக இருந்தது.
இப்போ வயது 24 நான் ஒரு பட்டதாரியாக வெளியேறுகின்றேன். எல்வாம் என் அறிவினால் கிடைத்தது என்ற இறுமாப்புடன் குதூகலத்தில் துள்ளிக்குதிக்கின்றேன். ஆனந்த கண்ணீருடன் உச்சிமுகர்ந்து வாழ்துகின்றார் என் அப்பா.
வயது 25 – நான் ஏன் வேலைக்கு போகணும்? இரண்டு வயதில் இருந்து படித்து படித்து கழைத்துவிட்டேன் கொஞ்சநாளாவது ப்ரியாக இருக்கவேண்டாமா?
அதை தாங்க எலாதே இந்த மனசனுக்கு... ஏன் இந்த அப்பா இப்படி இருக்கிறாரோ தெரியாது..
வயது 28 எனக்கு திருமண ஏற்பாடு அமோகமாக நடக்கின்றது. மனதில் ஒரு மகிழ்ச்சிதான். இதோ திருமண இறுதிப்பொழுது அப்பாவுடன் மணமேடைக்கு என் கணவனை நோக்கி செல்கின்றேன். என் பெயரில் இருந்தல்ல வாழ்வில் இருந்தே அப்பா தூரப்போவதுபோல ஒரு கலக்கத்தை உணரமுடிகின்றது.
வயது 30 இப்போ என் மகனுக்கு நானும் ஒரு தாய்.
அவனது ஒவ்வொரு அசைவும் என் அப்பாவை நினைவு படுத்துகின்றன.
அவன் தவழுகின்றான், அனால் எனக்கு வலிக்கவில்லை, நடக்க முயற்சி செய்து விழுகின்றான் ஓடிப்போய் தூக்கி அணைக்கவில்லை...
ம்ம்ம்.... அப்பா சொல்லுவது எல்லாம் சரிதான்...
இப்போ எனக்கு வயது 35 - என் அப்பாவைப்போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம்தான் அப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக