சேசுராஜ், முன்னாள் போராளி.
(பெயர் மாற்றப்பட்டு உள்ளது)
''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர். அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக 'போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம். அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.(பெயர் மாற்றப்பட்டு உள்ளது)
ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
''நாங்கள் 60 வருட காலம் போராடிப் பார்த்துவிட்டோம். இன்றைக்கு எங்கள் எதிர்காலம் சம்பந்தமாக எந்தவிதமான நம்பிக்கையும் அற்று இருக்கிறோம். இத்த கைய சூழலில் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு. இப்போது உள்ள நிலையில் அவர் களால் மாத்திரம்தான் ஈழத் தமிழர்களின் மேலான அடக்குமுறையைச் சர்வதேசத்துக் குக் கொண்டுசெல்ல முடியும்.இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தும் மாநாட்டு அழைப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். சொந்த விருப்புவெறுப்புகளை விடுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர். அவர் பின்னால் பெரும் தொண்டர் படையணி உள்ளது. அவரை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவரிடம் உளச் சுத்தியான ஈழ ஆதரவு இருக்கும் என நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. ஈழத் தமிழர்கள் அனைவருமே கருணாநிதியின் மேல் மிகப் பெரிய கோபத் திலும் வெறுப்பிலும் உள்ளார்கள். ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத் தாகக் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அவர். ஈழப் போரை நிறுத்த வேண்டிய தார் மீகக் கடமை அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார். புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் கடும் வெறுப்பில் அவர் இருந்தார். அந்த வெறுப்பைபுலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது அவர்கள் மேல் காட்டினார். ஆனால், புலிகளின் தோல்வி, ஈழத் தமிழர்களின் தோல்வி என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே ஈழத் தமிழன் அவரை மன்னித்து இருப் பான். ஆனால், உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்திவிட்டு, 'ஈழத்தில் போர் முடிந்துவிட்டது’ என அவர் ஒரு பொய்யான தகவலை உலகத்துக்கும் தமிழ்நாட்டு மக்க ளுக்கும் சொல்லி தமிழ்நாட்டிலே ஏற்பட்ட மக்களின் எழுச்சியை நயவஞ்சகமாக அடக்கினார். அதை நாம் எப்படி மறப்பது?''
யோ.கர்ணன், இறுதிப் போரில் பங்கெடுத்த போராளி
'' 'தமிழகத் தேர்தல் அரசியல் இழுபறிக்குள் எமது ரத்தத்தை விற்பனைப் பொருளாக்கிவிடாதீர் கள்’ என்பதே எமது வேண்டுகோள். 'தயவுசெய்து எங்களை விட்டிடுங் கடா’ என ஈழத் தமிழர்கள் கை கூப்பிக் கதறி அழுதாலும், இந்த விற்பனையாளர்கள் விட மாட்டார் கள்போல் உள்ளதே.கருணாநிதியையும் ஒரு மீட்பராக ஈழத் தமிழர்கள் துதித்த காலம் ஒன்று இருந்ததுதான். நாங்கள் வேர் கள் அறுபட்டு அகதியாக ஓடிக் கொண்டிருந்த காலத்தில், பற்றுவதற்கு ஒரு சிறு துரும்பாவது கிட்டாதா என இந்தப் பூமிப் பந்தின் திசைகள் எல்லாம் கைகளை அளைந்து அந்தரித்துக்கொண்டு இருந்த நாட்களில் அவர் எங்கள் கண்களில் தென் பட்டார்தான். மனிதச் சங்கிலிப் போராட் டம் உள்ளிட்ட அவரது செயற்பாடுகள்தான் அந்த நாட்களில் பெரும்பாலானவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. யுத்த வளையத்தில் அதிகமும் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகவும் அவரது பெயர் இருந்தது. ஆனால், நாங்கள் வருந்தியழைத்த அந்தப் பொழுதுகளில் எல்லாம் அவர் வரவே இல்லை. இப்போது மீண்டும் வந்திருக்கிறார், எல்லாம் முடிந்த பின், நாங்கள் அழைக்காமலேயே. இதைப் பார்த்து நாம் அழுவதா, இல்லை சிரிப்பதா, இல்லை சிரித்துக்கொண்டே அழுவதா?
கருணாநிதிக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. ஈழத்தில் மகிந்தராஜ பக்ஷேவை நம்புவதற்குத் தயாராக உள்ள தமிழர்கள்கூட கருணாநிதியை நம்புவதற் குத் தயாராக இல்லை!''
சயந்தன், ஈழ எழுத்தாளர்: ''ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் - குறிப்பாக தி.மு.க-வின் தற்போதைய நடவடிக்கைகளை - ஒருவிதமான விரக்தி, ஏமாற்றம், ஏளனம், கோபம் எனக் கலவையான உணர்வுகளின் ஊடாகத்தான் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை விடுத்துப் பார்த் தாலும்கூட, இறுதி யுத்தத்தில் சிக்குண்ட வர்கள், உறவுகளை இழந்து தவித்தவர்கள், இன்னமும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாது அவலப்படுவோர் அனைவரிடத்திலும் கலைஞர் மீதான ஆற்றாமையும் கோபமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நம்பிக் கெட்ட சனங்களின் உணர்வுகள் அவை.
ஈழ விவகாரமும் தமிழகத் தேர்தல் அரசியலில் ஒரு முக்கியக் கூறாகப் பார்க் கப்படுவதால், அவரவர் வசதிப்படிநடனம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் 'டெசோ’வும் ஒன்று. சற்றே புத்தி தெளிவுள்ள ஒருவனால்கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். காலங்காலமாகத் தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக் கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது
'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ ''
ஆனந்த விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக