தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்ற ரயில்வே அமைசச்ர் முகுல் ராய் பயணித்த பெட்டியின் விலை மட்டும் ரூ.1.5 கோடி என்று தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூரில் தீப் பிடித்தது. இந்த விபத்தில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய ரயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் வருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் விபத்து நடந்து 12 மணி நேரம் கழித்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து இருந்து நெல்லூருக்கு ரயிலில் சென்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுவிட்டு அதே ரயிலில் சென்னை திரும்பினார். அவர் சென்னை வந்திறங்கும் முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார்ம் 6ல் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு வாசனை திரவிய ஸ்ப்ரே அடிக்கப்பட்டது. இதில் விந்தை என்னவென்றால் ரயில் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் இதே பிளாட்பாரத்தில் தான் வந்து இறங்கினர்.
அவர் இறங்கும் இடத்தில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அத்தனை பேர் கருகிவிட்டார்களே என்று கதிகலங்கி நின்ற மக்கள் ரயில்வே துறை அமைச்சரின் வருகையொட்டி நடந்த ஏற்பாடுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
முகுல் ராய் சென்ற சொகுசு பெட்டியின் விலை மட்டும் ரூ.1.5 கோடி ஆகும். ரயில்வே துறைக்கு வருமானத்தை கொடுக்கும் பயணிகள் செல்லும் பெட்டிகளில் சரியான வசதிகள் இல்லை. ஆனால் அமைச்சர் சென்ற பெட்டியிலோ படுக்கையறை, சமையலறை, ஆலோசனைக்கூடம் என்று ஏகப்பட்ட வசதிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக