அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கிவரும் பெற்றோரின் பிள்ளைகள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்களாயின் அவர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு விசா வழங்கப்படுமென அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் நேற்று நிகழ்த்திய உரையின் போதே இப்புதிய நடைமுறை பற்றி...அறிவித்தார்.
நாட்டினுள் சட்டவிரோதமாக குடிபெயரும் அகதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்காத வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையிலும் இருப்பதுடன், அதிதிறமை சாலிகளாக இருப்பார்களாயின் அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வேலை செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் 'இது ஒரு மன்னிப்பு நடவடிக்கையோ, விதிவிலக்காக அகதிகளுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்களோ அல்ல. தனித்திறமை வாய்ந்த, நாட்டுப்பற்றுள்ள வாழ வழிதேடும் அகதிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு தற்காலிக சந்தர்ப்பம்' என்றார். இந்நாட்டுக்கு அகதிகளாக வருபவர்களின் பிள்ளைகள், இங்கு கல்வி கற்கிறார்கள்.
இங்கு நண்பர்களை தேடுகிறார்கள். எங்கள் கொடியின் கீழ் ஒன்று திரள்கிறார்கள். தங்களை அமெரிக்கர்களாகவே மனதளவில் மாறிக்கொள்கிறார்கள்.
ஆனால் ஓர் கல்லூரி புலமைப்பரிசிலுக்காக விண்ணபித்தல், ஒரு தொழிலுக்காக விண்ணப்பித்தல், அல்லது வாகன ஓட்டுனர் படிவம் எடுத்தல் போன்ற செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தி கொள்ளும் வரை தங்களிடம் முறையான குடியுரிமை பத்திரம் இல்லை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை' என ஒபாமா மேலும் தெரிவித்தார்.
இரண்டாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒபாமா தேர்தல் கால அறிவிப்பாக இதனை வெளியிட்டுள்ளதால் இதுவும் வாக்கு சேகரிக்கும் உக்தி என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக