நேற்று முன்தினம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. அதாவது, திருச்சியில் பஸ் டிரைவருக்கும், லாரி டிரைவருக்கும் ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட தகராறு முற்றி பஸ் டிரைவரை பல பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி கொன்றிருக்கிறான் கோபமான அந்த லாரி டிரைவர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தில் திகிலில் உறைந்திருந்து போயினர் பயணிகள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லாரியுடன் தப்பியிருக்கிறான் அந்த பாதகன்.
உடனே போலிசுக்கு தகவல் பறந்து அடுத்த செக்போஸ்டில் லாரியுடன் அவனை மடக்கியிருக்கிறார்கள். சம்பவ இடத்திலேயே உயிர் போன பஸ் டிரைவருக்கு மனைவியும், பிளஸ் ஒன் படிக்கும் மகளும், எட்டாவது படிக்கும் மகனும் உள்ளனர். அவர்களின் கதி இனி என்னவாகும் என்று தெரியவில்லை.
கைது செய்யப்பட்ட லார் டிரைவர் இனி ஜெயிலுக்கு போவான். சில நாட்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்துவிடுவான். அதன் பிறகு வாய்தா...வாய்தா என்று வழக்கு இழுக்கப்பட்டு பல வருடம் கழித்து ஏதாவது ஒரு தீர்ப்பு வரும். இதுதான் நடக்கும்.
கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், பல பேர் பார்க்கிரார்கள் என்ற லஜ்ஜையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இப்படி செய்திருக்கும் லாரி டிரைவருக்கு எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும். (அப்படியானால்....பலபேர் பார்க்காவிட்டால் எல்லாம் செய்யலாமா என்று கேட்கவேண்டாம்....பல பேர் பார்க்கும்போதே இப்படி செய்தவன் யாரும் இல்லாவிட்டால் இன்னும் என்னன்ன செய்வான்?
இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். பல பேர் பார்க்க இப்படி செய்த அந்த கொடுரனுக்கு எதற்கு ஜெயில் விசாரனை எல்லாம்?. எதற்காக இவனை ஜெயிலில் போட்டு அச்சடித்த சோறு, யூனிஃபார்ம் என்று எல்லாம் கொடுத்து அரசாங்க மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கவேண்டும்?.
சாட்சிகள் இல்லாவிட்டால் கூட, வழக்கை இழுக்கலாம். ஆனால், இந்த சம்பவத்திற்கு பலர் சாட்சியாக இருக்கும்போது எந்த விசாரனையும் தேவையில்லை என்றே கருதுகிறேன். ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில் பத்தோடு பதினொன்றாக இந்த வழக்கையும் சேர்த்து எதற்காக நீதிபதியின் பொன்னான நேரத்தையும் வீணடிக்க வேண்டும்?
இப்படிப்பட்ட கொடூரர்களுக்கு மரண தண்டனைதான் அதிகபட்ச தண்டனையாக இருக்கவேண்டும். அதுவும் வழக்கு வய்தா என்று எதற்கும் வாய்ப்பில்லாமல் உடனே நிறைவேற்றவேண்டும். பலபேர் பார்க்க இப்படிப்பட்ட பாதகத்தை செய்த இவனை பலபேர் பார்க்க பொது இடத்தில் தூக்கில் இடவேண்டும். அதுதான் மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும், சட்டத்தின் மேல் பயமாகவும் இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக