கல்வியின் உண்மையான நோக்கம் சிதைக்கப்பட்டு பணம் சம்பாதிப்பதற்கே கல்வி என்ற சிந்தனை மிகைத்திருக்கும் இன்றைய கல்வித்திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த மனித சமூகத்தை உருவாக்கிடும் இலக்கை மையமாக கொண்டுள்ள மதரஸா கல்வியின் மேம்படுத்தப்பட்ட பாடதிட்டமும் அதன் பயிற்றுவிப்பு முறைகளும் சமீபகாலமாக வட இந்திய மக்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்திய மக்களின் வாழ்வில் மதரஸாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறக்க இயலாது. மறுக்கவும் இயலாது. ஆனால் அந்த வசந்த கால வரலாறுகளை இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் செய்ததில் தொடக்கத்தில் வெள்ளைய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் விடுதலைக்குப் பிறகான இந்திய குடியரசிற்கும் பெரும் பங்கு இருக்கிறது.
மதரஸாக்கள் இந்தியாவின் தேசிய சின்னங்கள்இந்தியச் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மதரஸா கல்வி முறையே விளங்கி வந்தது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்திய நாட்டில் ஒழுக்கம் சார்ந்த வாழ்வு முறையை விரும்பும் எல்லா மதத்தினரும் மதரஸா கல்வி முறையையே தேர்வு செய்தனர். வெள்ளையர் ஆட்சியில் தான் மதரஸா கல்வி முறை சிதைத்து சின்னா பின்னமாக்கப்பட்டது.
நாளடைவில் மதரஸாக்களும் தனது பாரம்பர்ய பாதையில் இருந்து விலகி வெள்ளையரின் சூழ்ச்சிக்குப் பலியாகி மார்க்கக் கல்வி – உலகக் கல்வி என்ற இஸ்லாம் காட்டாத பிரிவினையில் சிக்கிக் கொண்டன. இதனால் இடைக் காலத்தில் மதிப்பிழந்து போன மதரஸாக்கள் தற்போது தங்களது தவறுகளை திருத்திக் கொண்டதால் எழுச்சி பெற்று வருகின்றன.
பீகார், வங்காளம், உ.பி. போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மார்க்கக் கல்வி – உலகக் கல்வி இணைக்கப் பெற்ற மதரஸாக்களில் மாணவர் கூட்டம் நிரம்பி வழிகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் அல்லாத மாணவரின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பது தான் மிகவும் ஆச்சரியமான செய்தி. வெள்ளையர் ஆக்கிரமிப்பிற்கு முன்பான மதரஸாக்கள் போல தற்போது மேம்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் தான் பயிற்றுவிக்க வேண்டும் என்பதாகவோ ஒழுக்கமும் நேர்மையும் பண்பாடும் முஸ்லிம்களுக்கு மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்பதாகவோ ஒருபோதும் இஸ்லாம் வலியுறுத்தவில்லை. அதே போல பூமியில் மனித வாழ்வின் அனைத்து தேவைகளுக்குமான வழிகாட்டுதலையும் போதிக்கும் கல்வியைத் தான் இறைவன் வழங்கியுள்ளானே தவிர மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையை மட்டுமே போதிக்கும் கல்வியை இறைவன் வழங்கவில்லை.
மார்க்கக் கல்வியையும் – உலகியல் பாடங்களையும் ஒருமித்து வழங்கிடும் தரமான மதரஸாக்கள் தற்போது வட இந்தியா முழுவதும் பெருகி வருகின்றன. அத்தகைய மதரஸாக்களில் தங்களது குழந்தைகளை சேர்த்திட முஸ்லிம் அல்லாத பெற்றோர் பெரிதும் விரும்புகின்றனர்.
ஹேமலதா
பீகார் மாநிலம் காகவுல் என்ற நகரில் உள்ள மதரஸாவில் இந்த ஆண்டு பட்டம் பெற்ற மாணவி பெயர் ஹேமலதா. இவர் பீகார் மாநிலத்தில் மதரஸாவில் பயிலும் முஸ்லிம் அல்லாத பெண்களில் ஹாஃபீஸ் பட்டம் பெற்ற முதல் பெண். அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர். இவர் மட்டுமல்ல இவரின் சகோதரரும் அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தில் பல மதரஸாக்களின் பொறுப்பாளராக உள்ள மௌலானா மஸாருல் – ஹக் அவர்கள் “ஒவ்வொரு ஆண்டும் பல முஸ்லிம் அல்லாத குழந்தைகள் மதரஸாக்களில் சேர்ந்து வருவது பெருமைக்குரியதாக உள்ளது.
இவர்கள் கல்வியை முடிக்கும் போது அரசின் உலகியல் பாடங்களில் திறன் பெறுவதோடு அரபு மொழியிலும் திறன் பெற்றவர்களாகவும் அல்குர்ஆனை சரளமாக ஒதியும் பல அத்தியாயங்களை மனனம் செய்தவர்களாகவும் வெளி வருகின்றனர்” என்கிறார்.
அஞ்சலி ராஜ்
18 வயது நிரம்பும் அஞ்சலி ராஜ் என்ற மாணவி 10 வகுப்பு (ஃபவுகானியா) பீகார் மாநில மதரஸா போர்ட் தேர்வில் 805 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
“இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியான உடன் நாட்டின் பல பகுதிகளில் இருந்து எனது மகளை பார்த்து பேட்டி எடுப்பதற்கு பல பத்திரிகையாளர்கள் வந்தனர்” என்று அஞ்சலி ராஜின் தந்தை அஜய் ராஜ் பெருமையோடு கூறுகிறார்.
பீகார் மதரஸா போர்டின் தலைவர் மவுலானா இஜாஸ் அகமது அவர்கள் இந்த ஆண்டு பீகார் மதரஸா போர்ட் பிரிவில் 100 மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். இந்த மாணவர்களின் பெற்றோர் “மற்ற பள்ளிக் கூடங்களை விட மதரஸாக்களில் ஒழுக்கம் போதிக்கப்படுவதால் தங்கள் குழந்தைகளை சேர்த்ததாக கூறுகின்றனர்” என்று மவுலனா இஜாஸ் கூறுகிறார்.
பீகார், உ.பி. வங்காளம், போன்ற மாநிலங்களில் (STATE MADRASSA BOARD) மாநில மதரஸா கல்வி வாரியம் நடத்தும் பாடத்திட்டத்தை மாநில அரசே நடத்துகிறது. இது அல்லாமல் தனியரால் நடத்தப்படும் மதரஸாக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
இவை எல்லாவற்றிலும் தரமான கல்வியும், உணவும், தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மதரஸா கல்வி வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மதரஸாக்களில் அரசின் பாடமும் இஸ்லாமிய பாடமும் இணைக்கப்பட்டு கற்றுத்தரப்படுகின்றன.
சில தனியார் நடத்தும் மதரஸாக்களிலும் இதுபோன்ற ஒருங்கிணைந்த கல்வி முறை உள்ளன. மார்க்கக் கல்வி – உலகக்கல்வி இணைக்கப்பட்ட மதரஸாக்களைத்தான் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத மாணவர்களும் தேடிச் செல்கின்றனர்.
மார்க்க பாடங்கள் மட்டும் கற்பிக்கும் மதரஸாக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்படும் கால ஒட்டத்தை புரிந்து கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை மனித சமூகத்திடம் விதைத்திடும் திட்டத்திற்கே அல்லாஹ்வின் உதவியும் அருளும் கிடைத்திடும் என்பதற்கு இந்த மதரஸாக்களின் வளர்ச்சியும் சாதனையுமே எடுத்துக்காட்டு.
தமிழகத்திலும் மதரஸாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்களை சேர்த்திடும் காலம் மிக விரைவில் உருவாக வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக