இந்த அதிரடி வருமான வரி சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் இவ்வளவு அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்துவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை தி.நகரிலும், புரசைவாக்கத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. நகைக் கடை, பாத்திரக் கடை, இனிப்புக் கடை, ஜவுளிக் கடை என பல்வேறு கடைகளை இந்த நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகரில், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கடைகள் உள்ளன. புரசைவாக்கத்தில் சமீபத்தில் பிரமாண்ட கடையைத் திறந்து நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 8 மணிக்கு இந்த கடைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் படை அதிரடியாக முற்றுகையிட்டது. 500 வருமான வரி அதிகாரிகள் கடைகளை மூடி அதிரடி ஆய்வில் குதித்தனர். இதனால்வியாபாரம் நிறுத்தப்பட்டது.
நேற்று காலை தொடங்கிய ஆய்வு இன்னும் முடியவில்லை. இன்றும் சோதனை மற்றும் ஆய்வு நடந்து வருகிறது.
அனைத்துக் கடைகளுமே பிரமாண்டக் கடைகளாக உள்ளதால் ஒவ்வொரு தளமாக அதிகாரிகள் பிரிந்து சென்று அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கடைகளின் வரவு செலவுக் கணக்குகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இதுபோக இந்த நிறுவன கடைகளில் பணியாற்றி வரும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளிலும் விசாரணை மற்றும் சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி ஆய்வு காரணமாக சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்றும், இன்றும் வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வரும் இந்த சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் ஒரு நிறுவனத்தில் 500 அதிகாரிகள் சேர்ந்து வருமான வரி சோதனையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது. இதனால் வர்த்தக உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக