ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாகிறது! முதல்வர் அதிரடி அறிவிப்பு



புதிய தலைமைச் செயலக் கட்டிடம் பிரமாண்ட மருததுவமனையாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், "ஏ" பிளாக்கில் மருத்துவமனை, "பி" பிளாக்கில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்.

இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதல்வரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் வீணடிக்கப்படக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரி வந்த நிலையில் அந்த கட்டடத்தை பிரமாண்ட மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்படு்ம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் 4வது அரசு மருத்துவக் கல்லூரி

இங்கு அமையும் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை நகரில் அமையும் 4வது அரசு மருத்துவக் கல்லூரியாக இருக்கும். ஏற்கனவே சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை சென்னை பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக