ரமலான் நோன்பு என்பது தன் உடல் வருத்தி ஏழை எளியவரை நினைக்க வைப்பது ஆண்டாள் திருப்பாவையில் ”மையிட்டெழுதோம், மலரிட்டு யாம் முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்” என்று சொன்னது போல் மனிதனை புனிதனாக்க, புற அழகை ஓரந்தள்ளி, அக அழகை அதிகரிக்க செய்ய கடைபிடிக்கும் நோன்பு என்பது புரிய வந்தது நான் வளைகுடா நாட்டில் வசிக்க தொடங்கிய பின்னரே.
மனித வாழ்க்கையில் அகம், புறம் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என இறைவன் தடுத்ததால் உண்ணாமல் விலகி இருக்கின்றார்களே இப்பயிற்சி பெற்றவர்கள்? அப்படிப்பட்டவர்கள், ""பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே'' என இறைவன் தடுத்திருக்கையில் அதைச் செய்வார்களா...?
நோன்பு நோற்றவன் மனைவியுடன் சேரக்கூடாது என இறைவன் தடுத்திருக்கிறான். தன் மனைவியையே இறைவன் தடுத்ததால் அப்படித் தொடாமல் பயிற்சி பெற்றவன், ""விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' என இறைவன் தடுத்திருக்கும் நிலையில் அதன் பக்கம் நெருங்குவானா? அப்படி நெருங்க கூடாது என்பதையே இந்த நோன்பின் மூலம் அவர்கள் பெறவேண்டிய படிப்பினை.
நோன்பிருப்போர் செய்ய வேண்டியதைப் பின்வரும் நபிமொழிகள் கூறுகின்றன : ""யார் பொய்யான பேச்சுகளையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.'' மேற்கண்ட பொன்மொழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நோன்பாளி ஒழுக்க மேம்பாடும், பொறுமையும், தீமைகளிலிருந்து விடுபடவும் பயிற்சி பெறுகிறார்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை மூன்றரை மணி முதல் மாலை ஆறு, ஆறரை மணிவரை கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம் பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல், இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாட்டை நினைவில் நிறுத்திக்கொண்டு பார்த்தால், சுற்றிலும் உணவு புழங்குகையில் இந்த நோன்பை கடைபிடிப்பது அவர்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பது புரியும்.
இஸ்லாமியர்கள் இந்த சிரமங்களுடனே கூட தங்கள் மதக்கோட்பாட்டை கடைபிடிப்பது அவர்களது மன உறுதியையும், படைத்த கடவுள் மேல்
அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் காட்டுகிறது. அவர்கள் மேல் மரியாதையை கூட்டுகிறது.ஈதலின் அவசியத்தை உணர்ந்து தன் வருவாயின் சிறு பங்கை வறியோர்க்களிக்க ஈகையை புனிதக் கடமையாய் வலியுறுத்தும் நன்னெறியை அனைவரும் கைக்கொள்வோம். இல்லாதாரின் நிலையை அனைவரும் உணர வழிவகுக்கும் ஈகைப் பெருநாளை நோன்பு மேற்கொண்டு வரவேற்கும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் .
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். குறள் 229
பொருள், பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக