நடிகர் வடிவேலு அலுவலகம் விருகம்பாக்கம் வேதாசலம் தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 14-ந்தேதி நடிகர் சிங்கமுத்துவும் அவருடன் சிலரும் சேர்ந்து தாக்கினார்கள். இது தொடர்பாக வடிவேலுவின் மானேஜர் சங்கர் விருகம் பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன்னிலையில் நடிகர் சிங்கமுத்து ஆஜர் ஆனார்.
இந்த வழக்கில் நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கரிடம் சிங்கமுத்து வக்கீல் அறிவழகன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியை வடிவேலு சந்தித்தது தெரியுமா? என்று கேட்டார். அதற்கு சங்கர் தெரியும் என்று பதில் அளித்தார்.
நடிகர் வடிவேலு தூண்டுதலின் பேரில் பொய்யான புகார் தந்து நீங்கள் சாட்சி சொல்கிறீர்கள் என்று வக்கீல் கேட்டதற்கு இல்லை என்று சங்கர் கூறினார். சம்பவம் நடந்தபோது வடிவேலு எங்கு இருந்தார் என்று கேட்டதற்கு கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருந்ததாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு முன்னால் அதே தெருவில் வசிக்கும் படத்தயாரிப்பாளர் கண்ணன் வீட்டில் பட்டாசு வெடித்ததற்கான வழக்கு இருப்பது தெரியுமா? என்று கேட்டதற்கு தெரியும் என்றார். பட்டாசு வெடிப்பு வழக்கிற்கு பிறகு வடிவேலு அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததே என்பதற்கு அது எனக்கு ஞாபகம் இல்லை என்றார். தொடர்ந்து விசாரணை நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக