ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் ஈழம் குறித்து அனைத்து நாட்டு பார்வையாளர் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ உரை

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளு மன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-


ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும். ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. ஐரோப்பிய நாடாளு மன்றத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்குகிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக்குடி மக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார். போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619-ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638-ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர்.

பின்னர், 1796-ல் பிரித்தானியர்கள் வந்தனர். நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர். 1948 பிப்ரவரி 4-ல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள்.  ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிரூபித்த நிலையில், விடுதலைப்புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001-ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்தனர். சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில், நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகளையும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005-ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார்.

ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. தமிழ் நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. கடந்த வாரத்தில் செர்பிய முஸ்லிம்கள் 8 ஆயிரம் பேரை 95-ல் படுகொலை செய்தான் என்று போஸ்னி யாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன் ராஜபக்சேயைக் கூண்டில் எற்றக் கூடாது அவரது சகோதரர்களையும் கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னது இல்லையே? அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிரூபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன். தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வை யாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவ மும், காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.   என் உரையை முடிக்கும் போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன.

கல்லறைகள் திறந்து கொண்டன.

மடிந்தவர்கள் வருகிறார்கள்

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன

புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்

இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்

ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்

ஈழம் உதயமாகட்டும்

சுதந்திர ஈழக் கொடிபட்டொளி வீசிப்பறக்கட்டும்

ஆம், ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்.

இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக