முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.பத்திநாதனுடன் பிளேக் |
இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் அவர்கள் செவ்வாய் கிழமையன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சென்று சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார்.
இந்த மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடம்பெயர்ந்திருந்த மக்களைச் சந்தித்ததுடன், அவர்களுக்கான நீர் இறைக்கும் இயந்திரம், நன்னீர் மீன்வளர்ப்புக்கான மீன் குஞ்சுகள் அடங்கிய பொதிகள் என்பவற்றை வைபவரீதியாக வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசம் ஒன்றையும் பார்வையிட்டிருக்கின்றார்.
கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் மற்றும் அதிகாரிகளிடம் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள், இந்த மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன குறித்து கேட்டறிந்திருக்கின்றார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு மீனவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பணிகள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்பதற்காகவே மீள்குடியேற்றப் பகுதிக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
யுஎஸ் எயிட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் ஊடாக தமது நாட்டு அரசாங்கம் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாகவும் அவர் இங்கு கூறியிருக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக