தமிழக அரசியலில், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் தவிர, மாநில கட்சிகளில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மட்டுமே இருந்தன. தற்போது நடந்துள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடாததால், அதற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ம.க., இந்த தேர்தலில், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஓட்டு சதவீதம், 5.23 தான் உள்ளது. 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தால், அங்கீகாரத்தை தக்க வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், 29 தொகுதிகளில் வென்ற தே.மு.தி.க.,வுக்கு அங்கீகாரமும், சின்னமும் கிடைக்க உள்ளது. தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 7.88 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் விதிப்படி, அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், மொத்தம் செல்லுபடியான ஓட்டுகளில், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சட்டசபைக்கு இரண்டு உறுப்பினர்களாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது, லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், 6 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் இருந்து, லோக்சபாவுக்கு ஒரு உறுப்பினராவது தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது, சட்டசபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 3 சதவீத இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது, சட்டசபைக்கு மூன்று உறுப்பினர்கள் தேர்வாகி இருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளில், ஒரு நிபந்தனை மட்டுமே பா.ம.க., பெற்ற இடங்களுக்கு பொருந்துகிறது. அதாவது, மூன்று எம்.எல். ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும் என்பது. ஆனால், அதே விதியில், மொத்த இடங்களில், 3 சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மொத்தமுள்ள, 234 இடங்களில், 3 சதவீத இடங்களை பா.ம.க., பெற்றிருக்க வேண்டும். எது அதிகமோ அது தான் எடுத்துக் கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளதால், பா.ம.க., வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் ரத்தாகும். எனினும், இது தொடர்பாக அக்கட்சிக்கு முதலில் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பும். பின்னர், கட்சியின் விளக்கம் கிடைத்த பின், நேரில் அழைத்து விசாரணை நடத்தும். அதன்பின் தான், அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும். இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து உட்பட, பல்வேறு வகைகளில் பலனடைந்துள்ள தே.மு.தி.க., வுக்கு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் முதல் முறையாக கிடைக்க உள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தையும் தே.மு.தி.க., பூர்த்தி செய்