ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சமச்சீர் கல்வி: புத்தக விநியோகம் நிறுத்தம்?

சென்னை, மே 18: சமச்சீர் கல்வி புத்தக விநியோகத்தை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.  சமச்சீர் கல்வி முறையின் கீழ் வெளிவந்துள்ள தமிழ்ப் பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகளும், அவரது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பகுதிகளை நீக்கிவிட்டு புத்தகங்களை வெளியிடலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.  சமச்சீர் கல்வி முறை 10-ம் வகுப்பு வரை இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் 7.63 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.  சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப்புத்தகங்களில் கருணாநிதியின் செம்மொழி பாடலும், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், பிசிராந்தையார் பாடலுக்கு அவர் எழுதிய விளக்கம் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.  இந்தப் பகுதிகள் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. அரசை அதிருப்தியடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்தப் புத்தகங்களை என்ன செய்யலாம் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் சென்னையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஜீவரத்தினம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் (பொறுப்பு) வசுந்தரா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பான குறிப்புகள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்தப் பகுதிகளை எவ்வாறு நீக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  அந்தக் குறிப்பிட்ட பகுதிகளைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது, அந்தப் பக்கங்களை புத்தகங்களில் இருந்து நீக்கிவிடுவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அரசுத் தரப்பில் விசாரித்தபோது, சமச்சீர் கல்வி தமிழ்ப் புத்தகங்கள் குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதிலுள்ள சில பகுதிகளை நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.  வரும் கல்வியாண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்க உள்ளதையடுத்து, உடனடியாக இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும். புத்தகங்களைத் திரும்பப் பெறுவது, புதிதாக புத்தகங்களை அச்சிடுவது உள்ளிட்ட மாணவர்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  புத்தக விநியோகம் நிறுத்தம்: அரசுப் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 3.5 கோடி இலவசப் புத்தகங்கள் 65 கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 1 கோடி புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.  அரசுப் பள்ளிகளுக்கான இலவசப் புத்தகங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வந்ததாகவும், இந்த விநியோகத்தை நிறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக