சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதாபிமானச் சட்டமீறல்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ‘அவசர விவாதம்‘ ஒன்று நடத்தப்படவுள்ளது.
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியானதை அடுத்து 27 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ‘அவசர விவாதம்‘ நடத்துமாறு 50 உறுப்பினர்களைக் கொண்ட பச்சைக்கட்சி கோரியிருந்தது.
இதையடுத்து எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவும் உறுதி செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாத்துக்கு எடுக்கப்படவுள்ள தீர்மானம் சரியான நடுநிலையுடன் இருப்பதை உறுதி செய்ய தாம் ஏற்கனவே அங்கத்துவக் கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தவாரம் நடைபெறவுள்ள விவாதம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சைப் பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாக கொழும்புர வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விவாதம் ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக, சிறிலங்காவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டை மேலும் இறுக்கமடையச் செய்து விடும் என்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
சிறிலங்கா மீது மேலதிக விசாரணைகளை நடத்த அனைத்துலக விசாரணைக்குழுவை நியமிக்குமாறு சக்திமிக்க ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பு நாடுகள் வலியுறுத்தும் என்றும், அதனால் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும், அது வர்த்தகத் தடைகளை நோக்கிக் கொண்டு செல்லும் சாத்தியங்கள் இருப்பதாகவும் சிறிலங்கா அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக 27 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நடத்தப்படவுள்ள இந்த விவாதம் பெரியளவிலான கவனிப்பை ஏற்படுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழந்த பின்னர் சிறிலங்கா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நடத்தப்படவுள்ள பிரதான விவாதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக