நேற்று காலை ஐதராபாத்தில் நடந்த கட்சியின் பாதயாத்திரை விழாவில் அக்பரூதீன் கலந்து கொண்டுவிட்டு காரில் திரும்பிக் கொண்டு இருந்தார். அவருடன் அவரது கட்சி எம்.எல்.ஏ. அகமது பலாலா, ஐதராபாத் மாநகராட்சி கவுன்சிலர் மன்சூர் ஆகியோரும் காரில் இருந்தனர்.
சந்தியான குட்டா என்ற இடத்தில் வந்தபோது காரில் வந்த கும்பல் அக்பரூதீனை தாக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது வயிற்றிலும், மார்பிலும் 4 குண்டுகள் பாய்ந்தன. உடனே அவரது உறவினர் நடத்தும் ஒவைசி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஓபரேஷன் நடந்தது.
உடலில் இருந்த 3 குண்டுகள் அகற்றப்பட்டது. ஒரு குண்டு இதயத்தின் மிக அருகில் பாய்ந்து இருந்தது. இதனால் அதை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த குண்டை அகற்றினால் இருதயத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படும் என்பதால் அதை அகற்றவில்லை.
இதையடுத்து ஒவைசி ஆஸ்பத்திரியில் இருந்து ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அக்பரூதீன் மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதயத்தில் பாய்ந்த குண்டை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
முன்னதாக அக்பரூதீனை தாக்கியவர்களை அவரது பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இப்ராகிம் என்பவர் பலியானார். யூசுப்யாவை, அப்துல்பின் அலி ஆகியோர் யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்கள் மூலம் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது பொலிசுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் 7 பேரை பொலிசார் தேடி வருகிறார்கள். ஐதராபாத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பை அக்பரூதீன் எதிர்த்து வந்தார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை தீர்த்துக்கட்ட துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அக்பரூதீன் சுடப்பட்டதால் ஐதராபாத்தில் பதட்டம் நிலவுகிறது. கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஐதராபாத்தில் இன்று முழு அடைப்பு நடத்த மஜ்லிஸ் கட்சி அறிவித்து இருந்தது. ஆனால் திடீரென்று முழு அடைப்பு ஒத்திவைக்கப்பட்டது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக