புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிர் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் அருகே வெள்ளிக்கிழமை, வெற்றி களிப்புடன் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கிறார் அகில இந்தி
புதுச்சேரி, மே 13: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் என். ரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.இதில் ரங்கசாமியின் கட்சி தனித்து ஆட்சி அமைக்குமா? அல்லது அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமையுமா என்ற பேச்சு இப்போது எழுந்துள்ளது. கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்தியக் கூறுகள்தான் அதிகம் இருக்கின்றன. ரங்கசாமி கட்சி தனித்து 15 தொகுதிகளில் வெற்றி பெருந்தாலும் 2 தொகுதிகளில் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் ஏதாவது ஒரு தொகுதியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதனால் அவருடைய கட்சிக்கு இப்போது உண்மையான பலம் 14 தான். காரைக்கால் நிரவி டி.ஆர் பட்டினம் தொகுதியில் வி.எம்.சி. சிவக்குமார் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார். இவர் ரங்கசாமி ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும் ரங்கசாமி தனித்து ஆட்சி அமைக்க ஓர் எம்.எல்.ஏ.வின் பலம் குறைகிறது. அதனால் ரங்கசாமி கட்சியும் அதிமுகவும் கூட்டணி ஆட்சி அமைப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை எனக் கூறப்படுகிறது.ஓரிரு நாளில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனையை ரங்கசாமி நடத்துவார் என்று தெரிகிறது.காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த ரங்கசாமியை அக் கட்சி 4.8.2008-ல் அப் பதவியில் இருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாக வைத்திலிங்கம் முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும் அக் கட்சியில் தொடர்ந்து நீடித்தார் ரங்கசாமி. இப்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஒன்றரை மாதத்துக்கு முன்பு ரங்கசாமி புதியக் கட்சியைத் தொடங்கினார். குறுகியக் காலத்தில் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் ரங்கசாமி. காங்கிரஸ் கூட்டணி: 17 தொகுதிகளில் போட்டயிட்ட காங்கிரஸ் 7 தொகுதியிலும், 10 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை ஒரு தொகுதியில் வென்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக