துபை, ஏப்,14: பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவின் 8 வயது மகள் நந்தனா துபையில் இன்று உயிரிழந்தார்.சித்ரா மற்றும் அவரது கணவர் விஜயசங்கருக்கு நந்தனா ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.துபையில் எமிரேட்ஸ் ஹில்ஸில் அவர்கள் தங்கி இருந்தபோது நீச்சல் குளத்தினுள் நந்தனா தவறி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சித்ரா தனது குடும்பத்தினருடன் துபை சென்றிருந்தார். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.அந்த நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு செல்வதற்காக இன்று காலை சித்ராவும், அவரது குடும்பத்தினரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்கதவு திறந்திருப்பதும், மகள் நந்தனா வீட்டில் இல்லாததும் அவர்களுக்கு தெரியவந்தது.பின்னர் வெளியே தேடிப்பார்த்தபோது, நீச்சல் குளத்தில் நந்தனா மிதந்தபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் இருந்து நந்தனாவை வெளியே கொண்டு வந்து ஜேபெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் நந்தனா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.சம்பவம் நடந்தபோது சித்ராவும் வீட்டில்தான் இருந்துள்ளார். எனினும் அனைவரும் வேலைகளில் மும்முரமாக இருந்தபோது நந்தனா யாருடைய உதவியும் இல்லாமல் வெளியே சென்றதாகத் தெரிகிறது.குழந்தைகளுக்கு பெரிதும் பரிச்சயமில்லாத அந்த இடத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா தவறி விழுந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.நந்தனாவின் உடல் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.நந்தனாவின் மரணம் தொடர்பாக துபை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக