ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் அல்-குர்ஆனின் வசனங்களால் கவரப்பட்டும் அதை அடிபிறழாது பின்பற்றியொழுகிய சத்திய சீலர்களின் நற்பண்புகளைக் கண்டும் எண்ணற்றோர் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்களின் வாழ்க்கை முறையோ குர்ஆனிலிருந்து வெகு தூரமாகவே இருக்கிறது. ஆயினும் மேலை நாடுகளிலும் தூர கிழக்கு நாடுகளிலும் இஸ்லாமே வேகமாக வளரும் மார்க்கமாக இருக்கிறது. இதற்கு காரணம் தற்போதுள்ள முஸ்லிம்கின் வாழ்கை முறையைப் பார்த்தா என்றால் நிச்சயமாக இல்லை!
அருள்மறையாம் அல்-குர்ஆனின் அற்புத வசனங்களைக் கண்டு அதில் ஈர்க்கப்பட்டே ஏராளமானவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இதை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு, தாம் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணமாக அவர்கள் குறிப்பிடும் காரணங்களில் தலையானதும் முக்கியமானதுமாக திருக் குர்ஆன் விளங்குகிறது. நாம் பேட்டி கண்ட பலரும் அல்-குர்ஆனே தாம் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தது என்று கூறுகின்றனர். ஆனால் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு பிறந்த நம்முடைய சகோதர, சகோதரிகளின் நிலையோ குர்ஆனைக் கூட ஓதத் தெரியாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதவேண்டிய மிக பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.
குர்ஆன் என்பது பட்டுத் துணியில் சுற்றி பரணியில் பத்திரமாக வைப்பதற்கோ அல்லது வீட்டில் இழவு (மரணம்) விழுந்தால் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து ஓதுவதற்காகவோ அருளப்பட்டதன்று!
அல்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கத்தை அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 ல் கூறுகிறான்: -
“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”
அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் அவனுடைய படைப்பினமான மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அருளிய சத்திய திருமறையில், அனைத்து மனிதர்களையும் நேக்கி இந்தக் குர்ஆனைக் குறித்து சிந்தனை செய்து ஆராய்சி செய்யுமாறு பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.
இறைவன் கூறுகிறான்: -
“அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?” (4:82)
“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்” (38:29)
சாதாரண பாமர மக்களால் கூட புரிந்துக்கொள்ளும் எளிமையான முறையில் அல்-குர்ஆனை அருளியிருப்பதக அல்லாஹ் கூறுகிறான்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
இஸ்லாமிய பெயர் தாங்கிய மத புரோகிதர்களை கூலிக்கு அமர்த்தி அல்-குர்ஆனை ஓதுவதால் இறந்தவருக்கோ அல்லது அவ்வாறு கூலி கொடுத்து ஓத வைப்பவருக்கோ இறைவன் மேற்கண்ட வசனங்களில் கூறிய நல்லுணர்வும் அல்-குர்ஆனைப் புரிந்துக் கொள்ளும் பாக்கியமும் எவ்வாறு கிடைக்கும்? கூலிக்கு ஆட்கள் வந்து ஓதி விட்டுப் போனால் நாம் எவ்வாறு அல்குர்ஆனின் வசனங்களை கவனித்து சிந்தித்து ஆராய முடியும்? மேலும் கூலிக்காக வந்து ஓதுபவர்களிடம் இன்று இந்த வீட்டில் என்ன சாப்பாடு கிடைக்கும்? எவ்வளவு பணம் தருவார்கள் என்ற எண்ணமே மேலோங்கியே இருக்கும் என்பதல்லாது அந்தப் புரோகிதர்கள் உண்மையில் இவ்வாறு ஓத செய்பவர்களின் இறந்த உறவினர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றா நினைப்பார்?
அப்படியே அவர்கள் நன்மையையே நினைத்தாலும் கூட அது இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறையில்லையே! மாறாக இஸ்லாத்தில் இல்லாத புதுமையான செயல்களைச் செய்த பாவம் அல்லவா கிடைக்கும்? ஏனென்றால் கூலிக்கு ஆள் அமர்த்தி குர்ஆன் ஓதும் பழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்களை அப்படியே பின்பற்றி வாழ்ந்த சகாபாக்கள் காலத்திலோ இல்லாத, ஒரு பிற்காலத்தில் வந்தவர்களால் மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட ஒரு நூதன செயலாகும்.
“மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் பித்அத்துகள். பித்அத்துக்ள அனைத்தும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்” என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். குர்ஆனை ஓதி அதன் நன்மைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்றும் அதற்கான கூலியை பிறரிடம் எதிர்பார்க்க கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தங்களின் சுனனில் அறிவிக்கிறார்கள் : (இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி)) அவர்கள் குர்ஆன் ஓதும் ஒருவரை கடந்து சென்றார்கள். அப்போது அவர் அவர்களிடம் (ஏதோ சிலதை தருமாறு) கேட்டார். அதற்கு அவர் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’. நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்:
“யாராவது குர்ஆன் ஓதினால் அதனைக் கொண்டு அல்லாஹ்விடமே கேட்கட்டும். பிற்காலத்தில் ஒரு சமூகத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதிவிட்டு அதன் மூலம் மக்களிடம் (பலனை) எதிர்பார்ப்பார்கள்” ஆதாரம் : திர்மிதி.
மேற்கண்ட ஹதீஸின் படியும், கூலிக்கு ஓதவது கூடாது என்பதும் அறியமுடிகிறது.
என தருமை சகோதர, சகோதரிகளே! அல்-குர்ஆன் அருளப்பெற்றதன் காரணம் அறிந்து அதை பொருளுடன் படித்து வருவோமேயானால் அது கூறும் நற்பலன்களை இன்ஷா அல்லாஹ் நாம் பெற முடியும். திருமறையை நாம் பொருளுடன் ஓதி வருவதால் ஏற்படும் நன்மைகளை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்: -
- குர்ஆன் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான் – (42:52)
- குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது – (45:20)
- குர்ஆன் நம்பிக்கையாளாகளுக்கு நேர்வழிவழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது – (45:20 , 27:77)
- குர்ஆன் நேர்வழி காட்டுகிறது – (17:9 , 46:30 , 45:11)
- குர்ஆன் முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது – (27:2)
- குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது – (41:4 , 44:3)
- குர்ஆன் அகப்பார்வை அளிக்கிறது – (50:8)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நல்லுபதேசம் செய்கிறது – (50:8 , 81:27-28)
- குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பவருக்கு படிப்பினை இருக்கிறது – (50:37)
- குர்ஆன் அறிந்துணரும் மக்களுக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது – (41:3)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமாகும் – (68:52, 69:48, 73:19, 76:29-30, 80:11-12)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது – (86:13-14)
- குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு வழிகாட்டியும், மருந்துமாகும் – (41:44)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது: வீனான வார்த்தைகளைக் கொண்டது இல்லை – (86:13-14)
- குர்ஆனில் எத்தகைய சந்தேகமும் இல்லை – (2:2)
- பயபக்தியுடையோருக்கு குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் – (2:2)
எனவே திருமறை கூறும் மேற்கூறிய நற்பலன்களை நாம் பெற வேண்டுமெனில் அதை பொருளுணர்ந்து நாம் படித்தால் தான் முடியுமே தவிர கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதுவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.
இறந்தவர்களுக்கு அவர்களுடைய வாரிசுகளாகிய நாம் நன்மைகள் செய்து அவர்களுக்கு சேர்த்திட விரும்பினால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகள் ஏராளம் உள்ளன. அவற்றையறிந்து அதன்படி நடந்தால் நமக்கும் நபிவழியைப் பின்பற்றிய நன்மைகள் கிடைப்பதோடு அல்லாஹ்விடம் சேர்ந்து விட்ட நமது உறவினர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நன்மைகள் கிடைக்கும்.
அதற்கு மாறாக மாறாக மாற்று மதத்தவர்கள் தங்களின் இறந்தவர்களுக்காக செய்கின்ற சடங்குகளைப் போல் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து குர்ஆன் ஓத வைத்தால் நாம் மேலே கூறப்பட்டுள்ள நற்பலன்களை இழந்து விடுவதோடு நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி ஒழுகிய சஹாபாப் பெருமக்களின் வழிமுறைகளில்லாத பித்அத்துகளைச் செய்த பாவம் நமக்கு வந்து சேரும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாகவும்.
அல்லாஹ் கூறுகிறான்.
- குர்ஆனை பின்பற்றாதவனுக்கு ஷைத்தான் நன்பனாக்கப்படுவான் – (43:36-39)
- அறிவுடையோர் தாம் குர்ஆனைப் பின்பற்றுகின்றனர் – (39:9)
- கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் குர்ஆன் நேர்வழிவழியில் சேர்க்கிறது என்று காண்கிறார்கள் – (34:6)
எனவே சகோதர, சகோதாகளே, மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வலியுறுத்துவது போல நம் வாழ்க்கை நெறிமுறைகளை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்புவானாகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக