திருச்சி மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த இருவேறு சம்பவங்களில் 2 பள்ளி வாகனங்கள் மோதியதில் அதே பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பள்ளி வாகனத்தின் கதவு திடீரென திறந்து கொண்டதில் யுகேஜி படித்து வந்த மாணவன் உயிரிழந்தான். இன்னொரு சம்பவத்தில் தான் பயணித்த பள்ளிக்கூட பேருந்து மோதியதில் மன வளர்ச்சி குன்றிய ஒரு சிறுவன் உயிரிழந்தான்.
யுகேஜி மாணவன் பலி - இருவர் கைது
திருச்சியை அடுத்து துறையூர் விகேஷ் வித்யாலயா பள்ளியில் யூகேஜி படித்து வந்த மாணவன் கிஷோர். இன்று காலை பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான் அப்போது சிக்கத்தம்பூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தின் கதவு தானாக திறந்ததால் மாணவன் கிஷோர் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறான்.
கீழே விழுந்த கிஷோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டான். பள்ளி வாகனத்தில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்றதுதான் விபத்துக்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் மற்றும் வாகன உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய மாணவன் பலி
மற்றொரு சம்பவத்தில் மன வளர்ச்சி குன்றிய 5ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளான்.
திருச்சி பி.எச்.இ.எல். நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் அறிவாலயம் என்ற மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவன் மிதுன். இவனை ஏற்றிக் கொண்டு வந்த வாகனம் பள்ளி அருகே இறக்கிவிட்டிருக்கிறது. வேனில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தான் மிதுன்.
மிதுன் நடந்து செல்வதை கவனிக்காமல் பள்ளி வாகனத்தை ஓட்டுநர் இயக்கியதால் அவன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மிதுன் துடிதுடித்தபடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
குடிகார டிரைவர்
பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரே நாளில் திருச்சி சுற்றுவட்டாரத்தில் இரு பள்ளி மாணவர்களின் உயிரை பள்ளி வாகனங்களே காவு வாங்கியிருக்கும் சம்பவம் பெற்றோரிடத்தில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை ஜீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து இறந்த சம்பவமும், அதேபோல சிரிப்பு நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் குடும்பத்தாருக்கு் சொந்தமான சென்னை பள்ளியில், நீச்சல் குளத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமும் தமிழக மக்களை உலுக்கிய நிலையில் இதேபோன்ற சம்பவங்கள் தொடருவது மக்களை பெரும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க காத்திருக்கின்றனவோ பள்ளிக்கூட வாகனங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக