ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரங்களில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் பிராணப் முகர்ஜி, தொடர்புபட்டதாக வெளிவந்த செய்திகளிளைத் தொடர்ந்து,
காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குற்றசாட்டுகளின் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் விருப்பம் தெரிவித்திருந்த போதும், பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பும் வரை பொறுத்திருக்குமாறு, நேற்று அவரைச் சந்தித்த அமைச்சர் சிதம்பரத்திடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சர்கள் சிதம்பரம்,பிராணப் முகர்ஜி, மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு எதிரான போராட்டங்களைத் தலைநகர் டெல்லி சிவசேனா அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். போராட்டங்களில் மேற்கொண்டிருந்தவர்கள், குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் உடன் பதவி துறக்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன், அவர்களது படங்களைத் தீயிட்டு எரித்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர் என டெல்லிச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க அமைச்சர் சிதம்பரம் மீது இவ் விவகாரம் தொடர்பில் எதுவிதமான விசாரணைகளையும் சிபிஐ மேற்கொள்ளாது எனவும், சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு, அதனிடம் அவ்வாறு விசாரிக்க வேண்டுமென யாரும் வற்புறுத்த முடியாதெனவும், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்ற வழக்கொன்றில் சிபிஐ தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக