மீரட்: மாலை மாற்றி மனைவியாக ஏற்றுக் கொண்டவளை ராக்கி கட்டி தங்கையாக்கிக்கொண்டு அவளது காதலனிடம் ஒப்படைத்த கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் உள்ள தேவலோக் காலனியில் வசிப்பவர் அனில் தியாகி. இவரது மகன் நிதிஷ். (21). ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ருதர்பூர் பகுதியில் ஆயுதபிரிவு படையில் எஸ்.ஐ.யாக இருப்பவரின் மூத்த மகளை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்தனர். மே 6-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தது. திருமணத்துக்கு முதல் நாள். பயிற்சி எஸ்.ஐ. ஒருவரை காதலித்து வந்த மணப்பெண் திடுதிப்பென்று அவருடன் ஓடிவிட்டார். திருமணம் நின்றால் மானம் போய்விடுமே என்று யோசித்தார் பெண்ணின் தந்தை. அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கல்யாணம் கட்டச் சொல்லி தன் இளைய மகள் ஆர்த்தியை வற்புறுத்தினார். அப்பாவுக்கும் மகளுக்கும் வாக்குவாதம். பிடிவாதமாக மறுத்தார் ஆர்த்தி. அதை கேட்கும் மனநிலையில் அவர் இல்லை. வலுக்கட்டாயமாக அவளை மணமகளாக்கினார். வேறு வழியில்லாமல் கண்ணீருடன் மணக்கோலம் பூண்டார் ஆர்த்தி.
நிதிஷிடமும் நிலைமையை எடுத்துக் கூறினர். ஆர்த்திக்கு பூரண சம்மதம் என்று பொய் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தார் பெண்ணின் தந்தை. திருமணம் நடந்து முடிந்தது. புகுந்த வீட்டுக்கு சென்றார் ஆர்த்தி. மணமகன் உள்பட யாருடனும் அவர் பேசவில்லை. வெட்கப்படுகிறார் என்று முதலில் நினைத்தார்கள். ஒரு கட்டத்தில், கதறி அழத் தொடங்கினார் ஆர்த்தி. ‘‘கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை காதலித்தேன். ரகசியமாக நாங்கள் திருமணமும் செய்துவிட்டோம். என் சம்மதம் இல்லாமல் இப்போது உங்களுடன் கட்டாய கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்’’ என்று கூறி அழுதார்.
விறுவிறுவென பூஜை அறைக்கு போனார் நிதிஷ். அங்கிருந்த ராக்கியை எடுத்து வந்தார். திருமணத்தை விபத்தாக நினைத்து மறந்துவிடு. உன்னை தங்கையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி அதை ஆர்த்தியின் கையில் கட்டினார். அவரது அப்பா, அம்மா சொன்னது இதைவிட அதிர்ச்சியாக இருந்தது. ‘‘பெற்ற அப்பாதான் உன் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துவிட்டார். நீ விரும்பியவனுக்கே உன்னை கட்டி வைக்கிறோம்’’ என்றார்கள். ஆனந்தக் கண்ணீர் மல்க அவர்களது காலை கட்டிக்கொண்டு அழுதார் ஆர்த்தி.
இற்கிடையில் இந்த விஷயம் ஆர்த்தியின் தந்தைக்கு தெரியவந்தது. நிதிஷ் குடும்பத்தினருடன் சண்டைக்கு வந்தார். ‘ஆர்த்தியுடன் குடும்பம் நடத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று மிரட்டினார். அதற்கு பயப்படாமல் நிதிஷ் வேகமாக நடவடிக்கையில் இறங்கினார். ஆர்த்தியின் காதலனை சந்தித்து நடந்தவற்றை எடுத்துக்கூறி திருமணத்துக்கு சம்மதம் பெற்றார். திருமண ஏற்பாடுகள் செய்ததுடன் பாதுகாப்பு தரும்படி போலீசிலும் புகார் செய்தார். போலீஸ் பாதுகாப்புடன் ஆர்த்தியை அவளது காதலனுக்கு மணம் முடிந்து வைத்தார் நிதிஷ். சினிமா காட்சிபோல நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக